Thursday, 25 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1699


புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன்
  • அரம்பையர் ஆடிப்பாடி நாவுக்கரசை ஆசை வலையில் வீழ்த்த முயன்றனர். \ 1691 \ 5.1.421
  • அப்பர் தம் சித்தம் திரியாமல் திருப்பணி செய்துகொண்டிருந்தார். \ 1692 5.1.422
  • உம்மால் இங்கு என்ன குறை உடையேன் – என்று தாண்டகம் பாடினார். \ 1693 \ 5.1.423
  • அரம்பையரின் செயல்கள் எடுபடாமல் போகவே, நாவுக்கரசை வணங்கி, அகன்று சென்றனர். \ 1694 \ 5.1.424
  • இதனை உலகம் அறிந்து போற்றிற்று. \ 1695 \ 5.1.425
  • என்னை இனிச் சேவடிக் கீழ் இருத்திடும் என்று திருவிருத்தம் பாடினார். \ 1696 \ 5.1.426
  • புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் – என்று பாடினார். \ 1697   \ 5.1.427
  • சித்திரை சதயம் நாளில் வானவர் மலர்மாரி பொழிந்து நாவுக்கரசரை விண்ணுலகம் கொண்டு சென்றனர். \ 1698 \ 5.1.428
  • நாவுக்கரசு வரலாற்றை நான் அறிந்தபடிப் பாடினேன். இனிக் குலச்சிறையார் வரலாற்றைப் பாடுவேன். \ 1699 \ 5.1.429

திருச்சிற்றம்பலம்
பாடல்

1691 
ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க
ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக
நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்  5.1.421

1692 
இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய
அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும்
மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம்
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார்     5.1.422

1693 
இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர்
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று
பொய்ம் மாயப் பெருங்கடலுள் எனும் திருத்தாண்டகம் புகன்றார்     5.1.423

1694 
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக்
காதலர் புரிந்து ஒழுகும் கைதவங்கள் செய்திடவும்
பேதம் இலா ஓர் உணர்வில் பெரியவரைப் பெயர்விக்க
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் 5.1.424

1695 
இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த
மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர்
மின் நிலவும் சடையார் தம் மெய் அருள் தான் எய்த வரும்
அந் நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார்  5.1.425

1696 
மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன்
என்னை இனிச் சேவடிக் கீழ் இருத்திடும் என்று எழுகின்ற
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார்     5.1.426

1697 
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று
நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி
அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார்     5.1.427

1698 
வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின்
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல்
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி
தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில்   5.1.428

1699 
அடியன் ஏன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப்
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன்
கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச்சிறையார்
முடிவில் புகழ்த் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்   5.1.429

திருச்சிற்றம்பலம்
  • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி