Wednesday, 24 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1690


பொன்னையும் மணியையும் பெருக்கி எறிந்தது
 • பாண்டிய நாட்டில் பல ஊர்களில் தமிழ் பாடினார். \ 1681 \ 5.1.411
 • செந்தமிழ் நாட்டிலிருந்து (பாண்டிய நாடு) பொன்னி நாடு வந்தார். \ 1682    \ 5.1.412
 • பூம்புகலூர் சிவனை வணங்கித் தமிழ்மாலைகள் பாடினார். \ 1683 \ 5.1.413
 • திருத்தாண்டகம், தனித்தாண்டகம், திருநேரிசை, தனிநேரிசை – பாடினார். \ 1684 \ 5.1.414
 • திருவிருத்தம், தசபுராண அடைவு, பாவநாசப் பதிகம் – பாடினார். \ 1685 \ 5.1.415
 • பூம்புகலூர்க் கோயிலைத் தூய்மை செய்யும் உழவாரப் பணி செய்துகொண்டிருந்தார். அங்கே பொன்னும் மணியும் சிதறிக் கிடக்கும்படி இறைவன் பாலித்தார். \ 1686 \ 5.1.416
 • நாவுக்கரசர் அவற்றைப் பெருக்கி அங்குள்ள குளத்தில் கொட்டினார். \ 1687 5.1.417
 • புல், கல், பொன், மணி, நெல் ஆகியவற்றில் வேறுபாடு பார்க்காமல் வாரி எறிந்தார். அப்போது சிவன் அருளால் அழகியர் பலர் விண்ணிலிருந்து இறங்கி வந்தனர். \ 1688 \ 5.1.418
 • இனிமையாகப் பாடினர். \ 1689     \ 5.1.419
 • அழகாக ஆடினர். \ 1690 \ 5.1.420

பாடல்

1681 
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி
வழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப்பொழுதும்
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள்
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார்   5.1.411

1682 
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப்
பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்து
வாம் புனல் சூழ் வளநகர்கள் பின்னும் போய் வணங்கியே
பூம்புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார்  5.1.412

1683 
பொய்கை சூழ் பூம்புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி
நையும் மனப் பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில்
கை கலந்த திருத் தொண்டு செய்து பெரும் காதல் உடன்
வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார்   5.1.413

1684 
நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும்
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத்தாண்டகமும்
கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர்இசையும்
துன்று தனி நேர்இசையும் முதலான தொடுத்து அமைத்தார்    5.1.414

1685 
ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும்
பார் பரவும் பாவநாசப் பதிகம் பன்முறையும்
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும்
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார்   5.1.415

1686 
அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர்
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில்
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார்     5.1.416

1687 
செம்பொன்னும்நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும்
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க
எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி
வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார்     5.1.417

1688 
புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த
நல்லோர் முன் திருப்புகலூர் நாயகனார் திரு அருளால்
வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார்    5.1.418

1689 
வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து
தான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மை
கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப்
பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார்     5.1.419

1690 
கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயரப்
பொற்புறும் அக் கையின்வழிப் பொரு கயல் கண் புடை பெயர
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவ போல் ஆடுவார்     5.1.420
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி