Tuesday, 23 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1620


காளத்தி - வாரணாசி
 • திருநாவுக்கரசர் பழையனூர் (திரு ஆலவனம் / ஆலங்காடு) சென்றார். \ 1611 \ 5.1.341
 • திருத்தாண்டகம் முதலான தமிழ்மாலைகள் பாடினார். வடதிசையில் சென்றார். \ 1612 \ 5.1.342
 • திருக் காரிக்கரை பணிந்த பின் திருக் காளத்தி வந்து சேர்ந்தார். \ 1613 \ 5.1.343
 • பொன்முகலி ஆற்றில் நீராடினார். மலையில் ஏறி, சிவனைப் பணிந்தார். \ 1614 \ 5.1.344
 • காளத்தி மலைக் கொழுந்தைப் போற்றித் திருத்தாண்டகம் பாடினார். \ 1611 \ 5.1.345
 • கண்ணப்பரை வணங்கினார். \ 1612 \ 5.1.346
 • அங்கு இருந்தபடியே கயிலை மலை வீற்றிருக்கும் கோலம் காட்டுமாறு வேண்டினார். \ 1613 \ 5.1.347
 • தொடர்ந்து சென்று திருப்பருப்பதம் அடைந்தார். \ 1614 \ 5.1.348
 • திருச் சிலம்பை இறைவனை வணங்கித் தமிழ் பாடினார். \ 1615 \ 5.1.349
 • தெலுங்கு நாட்டைக் கடந்து கன்னட நாடு சென்றார். \ 1616 \ 5.1.350
 • மாளவம் சென்றார். \ 1617 \ 5.1.351
 • இலாட பூமியைக் கடந்தார். \ 1618 \ 5.1.352
 • வாரணாசி சென்றார். \ 1619 \ 5.1.353
 • அங்கிருந்து கயிலை மலை செல்லலானார் . \ 1620 \ 5.1.354

பாடல்

1611 
அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின்
மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி
மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக்குடிமைச்
செம்மையினால் பழையனூர்த் திரு ஆல வனம் பணிந்தார்     5.1.341

1612 
திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாம் எனச் சிறப்பின்
ஒருவாத பெரும் திருத்தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப்
பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும்
மரு ஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக்கொள்வார்   5.1.342

1613 
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார்
செல் கதி முன் அளிப்பார் தம் திருக் காரிக்கரை பணிந்து
தொல் கலையின் பெரு வேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம்
மல்கு திருக் காளத்தி மா மலை வந்து எய்தினார்  5.1.343

1614 
பொன் முகலித் திரு நதியின் புனித நெடும் தீர்த்தத்தில்
முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ் வரையில்
சென்னி உறப் பணிந்து எழுந்து செம் கண் விடைத் தனிப்பாகர்
மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார் 5.1.344

1611 
காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக்கொழுந்தை
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும்
காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய்
நாதனை என் கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார்     5.1.345

1612 
மலைச் சிகரச் சிகாமணியின் மருங்கு உற முன்னே நிற்கும்
சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி
அலைத்து விழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத்
தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார்   5.1.346

1613 
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து
தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால்
பேணி திருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம்
காணுமது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார்     5.1.347

1614 
அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிகப்
பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்போடு போதுவார்
துங்க மால் வரை கானியாறு தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால் விடை அண்ணல் மேவும் திருப்பருப்பதம் எய்தினார்  5.1.348

1615 
மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்னகாதிபர் காம சாரிகளே முதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும்
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார்  5.1.349

1616 
அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில்படைச்
செம்மல் வெண்கயிலைப் பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால்
எம் மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்து உளோர்
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார்    5.1.350

1617 
கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும்
திரு நதித் துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும்
பெரு நலம் கிளர் நாடும் எண்ணில பின்படப் பொற்பினால்
வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார்     5.1.351

1618 
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று
எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய்
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல்
பங்கயப் பழனத்து மத்திய பைதிரத்தினை எய்தினார் 5.1.352

1619 
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும்
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன்
பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய்
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார்     5.1.353

1620 
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால்
போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச்
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர்
ஏகினார் இரவும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார்   5.1.354
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி