Tuesday, 23 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1610


திருமயிலை - திப்பாசூர்
 • நாவுக்கரசர் ஆன்மியூரைப் பாடிய பின் மயிலாப்பூர் வந்தார். \ 1601 \ 5.1.331
 • தமிழ் மாலைகள் அணிவித்து, மீண்டும் ஒற்றியார் வந்தார். \ 1602 \ 5.1.332
 • ஒற்றியூர் மக்கள் நகரை ஒப்பனை செய்து வரவேற்றனர். \ 1603 \ 5.1.333
 • கோயிலுக்குள் சென்று தொழுதார். \ 1604 \ 5.1.334
 • தரையில் விழுந்து வணங்கினார். \ 1605 \ 5.1.335
 • வண்டு ஓங்கும் செங் கமலம் - என எடுத்து மனம் உருகப் பாடினார். \ 1606 \ 5.1.336
 • முன்றில் திருப்பணி செய்துகொண்டே விருத்தங்கள், திருக்குறுந்தொகைகள், நேரிசைகள் பாடினார். \ 1607 \ 5.1.337
 • திருப்பாசூர் வந்தார். \ 1608 \ 5.1.338
 • சிவனைப் போற்றினார். \ 1609 \ 5.1.339
 • முந்தி மூவெயில் எய்த முதல்வனார் - என எடுத்துப் பாடினார். \ 1610 \ 5.1.340

பாடல்

1601 
திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்த அன்பினொடும்
பெருவாய்மைத் தமிழ் பாடி அம் மருங்கு பிறப்பு அறுத்துத்
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர்
மருவாரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார்     5.1.331

1602 
வரை வளர் மா மயில் என்ன மாட மிசை மஞ்சாடும்
தரை வளர் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கி
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படை ஆளி
திரை வளர் வேலைக் கரை போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார்    5.1.332

1603 
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி
நற் கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப்
பொற் குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து
மற்றவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர்     5.1.333

1604 
திரு நாவுக்கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்த
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு
ஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார்
கரு நாமம் தவிர்ப்பாரைக் கை தொழுது முன் வீழ்ந்தார்  5.1.334

1605 
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத்
தொழுத ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம்
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார்     5.1.335

1606 
வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப்
பண் தோய்ந்த சொல் திருத்தாண்டகம் பாடிப் பரவுவார்
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம்
கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார் 5.1.336

1607 
விளங்கு பெருந் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே
உளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக் குறுந்தொகைகள்
களங்கொள் திரு நேரிசைகள் பல பாடிக் கை தொழுது
வளங்கொள் திருப் பதிம் தனில் பல நாள்கள் வைகினார்     5.1.337

1608 
அங்கு றையும் நாளின்கண் அருகு ளவாம் சிவாலயங்கள்
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால்
பொங்கு புனல் திரு ஒற்றியூர் தொழுது போந்து உமையாள்
பங்குடையார் அமர் திருப்பாசூராம் பதி அணைந்தார் 5.1.338

1609 
திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும்
விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய
இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப்
பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார்  5.1.339

1610 
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச்
சிந்தை கரைந்து உருகு திருக் குறுந்தொகையும் தாண்டகமும்
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி
எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர்     5.1.340
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி