Monday, 22 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1580


திருப்பைஞ்ஞீலி
 • திருநாவுக்கரசர் காவிரியின் இரு மருங்கிலுமுள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று தமிழ் பாடிக்கொண்டு செல்கையில் திருவானைக்கா வந்தார். \ 1571 \ 5.1.301
 • சிலந்திக்கு அருளியவனைப் பாடினார். திருவெறும்பியூர் / திருவெறும்பூர் /, திருச்சிராப்பள்ளி மலை, கற்குடி, திருப்பராய்த்துறை – சென்று பாடினார். \ 1572 \  5.1.302
 • திருப்பைஞ்ஞீலி செல்லலானார். \ 1573 \ 5.1.303
 • பசி தாகத்தால் வருந்தினார். \ 1574 \ 5.1.304
 • சிவ பெருமான் அந்தணர் உருவம் தாங்கிக் குளம் அமைத்து, கட்டுச்சோறு வைத்துக்கொண்டு காத்திருந்தார். \ 1575 \     5.1.305
 • இந்தப் பால்சோறு உண்டு, இந்தக் குளத்தில் குளித்து இளைப்பாறிச் செல்லுமாறு நாவுக்கரசை வேண்டினார். \ 1576 \ 5.1.306
 • நாவுக்கரசு வாங்கி உண்டு களைப்பு தீர்ந்தார். \ 1577 \ 5.1.307
 • எங்குப் போகிறீர் – என்று வினவ, திருப்பைஞ்ஞீலி செல்கிறேன் – என்று நாவுக்கரசு சொல்ல, நானும் அங்குதான் செல்கிறேன் – என்று சொல்லிக்கொண்டு சிவன்-அந்தணர் உடன் சென்றார். \ 1578 \ 5.1.308
 • திருப்பைஞ்ஞீலி நெருங்கியதும் அந்தணர் மறைய, நாவுக்கரசர் இறைவன் கருணையை உணர்ந்து மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டார். \ 1579 \ 5.1.309
 • கோயிலுக்குள் சென்று பாடித் திருத்தொண்டு செய்துவந்தார். \ 1580 \ 5.1.310

பாடல்

1571 
பொங்கு புனலார்பொன்னியில் இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்குஇறைஞ்சித் தமிழ் மாலைகளும்சாத்திப் போய்
எங்கும் நிறைந்த புகழ் ஆளர்ஈறில் தொண்டர் எதிர் கொள்ளச்
செங்கண் விடையார்திருவானைக்காவின்மருங்கு சென்று அணைந்தார்     5.1.301

1572 
சிலந்திக்குஅருளும் கழல் வணங்கிச் செஞ்சொல் மாலை பல பாடி
இலங்கு சடையார்எறும்பியூர்மலையும் இறைஞ்சி பாடியபின்
சோதித் திருச்சிராப்பள்ளி மலையும்கற்குடியும்
நலம் கொள் செல்வத்திருப்பராய்த்துறையும்தொழுவான்நண்ணினார்  5.1.302

1573 
மற்றப்பதிகள் முதலான மருங்குஉள்ளனவும் கை தொழுது
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி
உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரியச்
செற்றசிலையார்திருப்பைஞ்ஞீலியினைச் சென்று சேர்கின்றார்   5.1.303

1574 
வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற நீர் வேட்கையொடும்
அழிவாம் பசி வந்து அணைந்திடவும்அதற்குச் சித்தம் அலையாதே
மொழி வேந்தரும் முன் எழுந்து அருள முருகுஆர்சோலைப்பைஞ்ஞீலி
விழி ஏந்தியநெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய்  5.1.304

1575 
காவும்குளமும் முன் சமைத்துக் காட்டி வழி போம்கருத்தினால்
மேவும்திருநீற்றுஅந்தணராய்விரும்பும் பொதி சோறும் கொண்டு
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல்
தாவும்புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும்காண்புஅரியவர் தாம்    5.1.305

1576 
அங்கண் இருந்த மறையவர் பால் ஆண்ட அரசும் எழுந்து அருள
வெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர்
இங்கு என் பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இப்
பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப்போக்கிப்போவீர்எனப்புகன்றார்   5.1.306

1577 
நண்ணும்திருநாவுக்கு அரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல்
உண்ணும் என்று திருமறையோர்உரைத்துப் பொதி சோறு அளித்தலுமே
எண்ணநினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய
தண்ணீர் அமுது செய்து அருளித் தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார்  5.1.307

1578 
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே
செப்புவார் யான் திருப்பைஞ்ஞீலிக்குப்போவ என்று உரைப்ப
ஒப்பு இலாரும் யான் அங்குப்போகின்றேன் என்று உடன் போந்தார்   5.1.308

1579 
கூட வந்து மறையவனார்திருப்பைஞ்ஞீலிகுறுகியிட
வேடம் அவர் முன் மறைத்தலுமேமெய்ம்மைத்தவத்துமேலவர் தாம்
ஆடல் புரிந்தார்அடியேனைப்பொருளாய் அளித்த கருணை எனப்
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரிபயில்வித்தார்    5.1.309

1580 
பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும்பரமர் கோயில் சென்று எய்தி
மைஞ்ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து
மெய்ஞ்ஞீலிர்மையினில்அன்புருகவிரும்பும் தமிழ் மாலைகள்பாடிக்
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார்   5.1.310
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி