Sunday, 21 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1550


திருவாய்மூர்
 • திறக்க அரிதில் பாடினேன். அடைக்க எளிதில் பாடினார் – என்று எண்ணியவாறு நாவுக்கரசர் இருந்தார். \ 1541 \ 5.1.275
 • அப்போது சிவபெருமான் திருநீற்றுக் கோலத்துடன் தோன்றி, “வாய்மூர் வா, இருப்போம்” என்றார். \ 1542 \ 5.1.276
 • வழி காட்டிக்கொண்டு சென்ற ஆதி மூர்த்தியை நாவுக்கரசர் பின்தொடர்ந்தார். \ 1543 \ 5.1.277
 • அவரைப் பற்ற முடியவில்லை. \ 1544 \ 5.1.278
 • கோயில் ஒன்றைக் காட்டி மறந்தார். நாவுக்கரசு செல்வது அறிந்து ஞானசம்பந்தரும் பின்தொடர்ந்தார். \ 1545 \ 5.1.279
 • கதவை மூடப் பாடியதால் எனக்குக் காட்சி தரவில்லை – என்று ஞானசம்பந்தர் வருந்தினார். \ 1546 \ 5.1.280
 • “பாட அடியார்” – என்று அடியெடுத்து நாவுக்கரசர் பதிகம் பாடினார். \ 1547 5.1.281
 • திருவாய்மூர் வணங்கிப் பாடினார். \ 1548 \ 5.1.282
 • இருவரும் வாய்மூர் அடிகளைப் போற்றிப் பாடினர். \ 1549 \ 5.1.283
 • வாய்மூரில் இருவரும் இருக்கும்போது, வளவன் மகள், தென்னன் மனைவி, பாண்டிமாதேவி அமைச்சர் குலச்சிறையாரை, ஞானசம்பந்தரை அழைத்து வரும்படி, தூது அனுப்பியிருந்தார். குலச்சிறையார் வந்து ஞானசம்பந்தரைக் கண்டார். \ 1550 \ 5.1.284

பாடல்

1541 
அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்து
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்    5.1.275

1542 
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண்
உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை ஓர் பாகம் உடையவர் தாம்
பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோலப் பொலிவினொடும்
துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடர வா என்றார்  5.1.276

1543 
போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி
ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே
ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள   5.1.277

1544 
சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர்
ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தாவாறே போல்
நீரார் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர்
பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்று இலரால்  5.1.278

1545 
அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல்
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருளத்
துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடரப் போந்தபடி
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார்  5.1.279

1546 
அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித்தேனுக்கே அல்லால்
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என  5.1.280

1547 
மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும்
நேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார்   5.1.281

1548 
பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருள
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து
சூடும் பிறையார் பெரும் தொண்டர் தொழுது போற்றித் துதி செய்து
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அந் நகரில் உடன் உறைந்தார்  5.1.282

1549 
ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்து
பூண்ட காதல் பொங்கி எழ வாய்மூர் அடிகள் போற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவர் ஒடு
மீண்டு வந்து திருமறைக் காடு எய்தி விமலர் தாள் பணிந்தார்  5.1.283

1550 
ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள்
சீத மதி வெண் குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம்
கோதில் குணத்துப் பாண்டிமா தேவியார் முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமைக் காண     5.1.284
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி