Sunday, 21 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1520


திருவீழிமிழலை
 • பல ஊர்களையும் கண்டு தொழுவதற்கு, புகலூரிலிருந்து பறப்பட்டனர். \ 1511 \ 5.1.245
 • நீலநக்க அடிகள், சிறுத்தொண்டர், முருகனார் மூவரும் விடைபெற்றனர். \ 1512 \ 5.1.246
 • நாவுக்கரசர் திருக்கடவூர் சென்றார். குங்கிலியக் கலய நாயனார் இல்லத்தில் உணவருந்தினார். \ 1513     \ 5.1.247
 • திருக்கடவூர் மயானம் கோயிலை வணங்கினார். பின் திரு ஆக்கூர் சென்றார். \ 1514 \ 5.1.248
 • ஆக்கூர் தான்தோன்றி மாடத்தைப் பாடினார். பின்னர் அப்பரும், ஆளுடைய பிள்ளையாரும் திருவீழிமிழலை சென்றனர். \ 1515 \ 5.1.249
 • அவ்வூர் மறையோர் இருவரையும் எதிர்கொண்டு வரவேற்றனர். 1516 \ 5.1.250
 • மணிவிளக்கு, குலைவாழை, பாக்குக்குலை, நிறைகுடம் வைத்து வரவேற்றனர். \ 1517 \ 5.1.251
 • இருவரும் கோயிலுக்குள் சென்று தொழுதனர். \ 1518     \ 5.1.252
 • கசிந்துருகிச் சொன்மாலை பாடினர். \ 1519    \ 5.1.253
 • பல நாள் தங்கியிருந்தனர். \ 1520 \ 5.1.254

பாடல்

1511 
அந் நாளில் தமக்கு ஏற்ற திருத்தொண்டின் நெறி ஆற்ற
மின்னார் செஞ் சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும்
முன்னாகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப்
பொன்னாரும் மணி மாடப் பூம்புகலூர் தொழுது அகன்றார் 5.1.245

1512 
திரு நீலநக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார்
பெரு நீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும்
வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார் 5.1.246

1513 
செங்குமுத மலர் வாவித் திருக் கடவூர் அணைந்து அருளிப்
பொங்கிய வெங் கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக்
குங்குலியக் கலயனார் திருமத்தில் குறை அறுப்ப
அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள்     5.1.247

1514 
சீர் மன்னும் திருக்கடவூர்த் திருமயானமும் வணங்கி
ஏர் மன்னும் இன்னிசைப் பாப் பல பாடி இனிது அமர்ந்து
கார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று
தேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார்  5.1.248

1515 
சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக்
கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து
வார்த்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன்
சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழிமிழலையினை     5.1.249

1516 
வீழிமிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும்
காழி ஞானப்பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால்
ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார் 5.1.250

1517 
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு
நீடு கதலி தழைப் பூம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப்
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார்  5.1.251

1518 
சென்று உள் புகுந்து திருவீழிமிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி
வென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார்    5.1.252

1519 
கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த அன்பு கரைந்து உருக
மெய்யில் வழியும் கண் அருவி விரவப் பரவும் சொல் மாலை
செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று
உய்யும் நெறித் தாண்ட தம் மொழிந்து அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க    5.1.253

1520 
முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணி வெற்பைப் பூ நீர் மிழலையினில் போற்றிப்
பல் நாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட்டு இருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்    5.1.254
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி