Saturday, 20 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1510


ஐவர்
அப்பர் - சம்பந்தர் - சிறுத்தொண்டர் - நீலநக்கர் - முருகனார் மடம்
 • ஞானசம்பந்தர் வேண்டுகோளுக்கு இணங்க - திரு ஆரூர் நகராளும் மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் இத் தகைமைத்து என்று என் மொழிகேன் – என்று அப்பர் பாடினார். \ 1501 \ 5.1.235
 • அதனைக் கேட்ட ஞானசம்பந்தர் “திருவாரூரரைக் கும்பிட்ட பின் இங்கு வந்து உன்னுடன் அமர்வேன்” என்றார். \ 1502 \ 5.1.236
 • சம்பந்தர் சென்றார். 1503     \ 5.1.237
 • அப்பர் தென்புகலூர் வந்து பணிந்தார். \ 1504 \ 5.1.238
 • செந்தமிழ் மாலை பாடினார். \ 1505 \ 5.1.239
 • செங்காட்டங்குடி, திருநள்ளாறு, அயவந்தி, திருமருகல் – வணங்கினார். \ 1506 \ 5.1.240
 • திருவாரூரைத் தொழுத பின் ஞானசம்பந்தரும் புகலூர் வந்தார். \ 1507 \ 5.1.241
 • அப்பர் எதிர்கொண்டு அழைத்துவர இருவரும் ஒருங்கிருந்தனர். அப்போது சிறுத்தொண்டர், நீலநக்கர் இருவரும் வந்து இருவரையும் வணங்கினர். \ 1508 \ 5.1.242
 • நால்வரும் முருகனார் மடத்தில் தங்கி, திருத்தொண்டு செய்தனர். \ 1509   \ 5.1.243
 • ஒருவரை ஒருவர் போற்றிக்கொண்டு தொண்டு செய்தனர். \ 1510 \ 5.1.244

பாடல்

1501 
சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும்
மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
இத்தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார்
முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை 5.1.235

1502 
அம் மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்
கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டே
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார்    5.1.236

1503 
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந்
தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏக
நா மரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார்
பூ மலர் வாசம் தண்பணை சூழும் புகலூரில்  5.1.237

1504 
அத் திரு மூதூர் மேவிய நாவுக்கரசும் தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளி வெள்ளம்
மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுதாரப்
பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணிவு உற்றார்   5.1.238

1505 
தேவர் பிரானைத் தென்புகலூர் மன்னிய தேனைப்
பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு
மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார்    5.1.239

1506 
சீர் தரு செங்காட்டங்குடி நீடும் திருநள்ளாறு
ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி
வார் திகழ் மென்முலையான் ஒரு பாகன் திருமருகல்
ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்   5.1.240

1507 
அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும்
துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால்
மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணுபுரத்து எங்கள்
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில்   5.1.241

1508 
பிள்ளையார் எழுந்ருளப் பெரு விருப்பால் வாகீசர்
உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண்
வள்ளலார் சிறுத்தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள
எள் அரும் சீர் நீலநக்கர் தாமும் எழுந்து அருளினார் 5.1.242

1509 
ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம்
ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாகப்
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை
நீங்கரிய திருத்தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார் 5.1.243

1510 
திருப்பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பு அரையன் மடப்பாவை இடப்பாகர் பொன் தாளில்
விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் 5.1.244
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி