Saturday, 20 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1490


திருவாரூர்
  • நல்லூரிலிருந்து பழையாறை, வலஞ்சுழி வழியாக, குடமூக்கு / கும்பகோணம் வந்தார். \ 1481 \ 5.1.215
  • நாலூர், தென்திருச்சேறை, குடவாயில், நறையூர், மேலூர், திர்வாஞ்சியம் – தொழுதார். \ 1482 \ 5.1.216
  • வேளூர் வழியாகத் திருவாரூர் வந்தார். \ 1483 \ 5.1.217
  • திருவாரூர் மக்கள் வீடுகளை ஒப்பனை செய்து வீதிகளைப் பொலியச் செய்து வரவேற்றனர். \ 1484 \ 5.1.218
  • மதிலுக்குப் புறத்தே சென்று வரவேற்றனர். \ 1485 \ 5.1.219
  • “தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் ஒன்றே எனக்கு வேண்டும்” என்றார். \ 1486 \ 5.1.220
  • தொண்டர் சூழத் தோரணவாயில் வந்தார். தேவாசிரியனை வணங்கினார். கோயிலில் நுழைந்து புற்று உகந்த சிவனைக் கண்டார். \ 1487 \ 5.1.221
  • திருத்தாண்டகம் பாடினார். \ 1488 \ 5.1.222
  • காண்டலே கருத்தாய் நினைந்து” என்னும் பதிகம் பாடினார். \ 1489 \ 5.1.223
  • “கனி இருப்பக் காய் கவர்ந்த கள்வனேன்” \ திருக்குறள் நினைவு \ என்று பாடினார். \ 1490 \ 5.1.224

பாடல்

1481 
நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை
பல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து
சொல்லூர் வண் தமிழ் பாடி வலஞ்சுழியைத் தொழுது ஏத்தி
அல்லூர் வெண் பிறை அணிந்தார் திருக் குடமூக்கு அணைந்து இறைஞ்சி    5.1.215

1482 
நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர்
பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி
மேலூர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிக்
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார்  5.1.216

1483 
பெரு வாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி
முருகு ஆரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும்
திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார்    5.1.217

1484 
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம்
நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார்
காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும்
சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார்     5.1.218

1485 
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால்
எல்லையில் தொண்டர் எயில் புறம் சென்று எதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார்  5.1.219

1486 
பற்று ஒன்று இலா வரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால்
உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே
புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று
அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார்   5.1.220

1487 
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி
ஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்து
நீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார்   5.1.221

1488 
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம்
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள்
தண் துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப்
புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து     5.1.222

1489 
காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம்
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி
ஈண்டு மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு
பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார்   5.1.223

1490 
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து
கொய்யும் மா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரைக்
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் என்று
எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே     5.1.224
சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி