Saturday, 20 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1480


விடம் தீரப் பாடியது
 • அப்பூதி அடிகள் மகன் திருநாவுக்கரசு வாழைக் குருத்தை அறுக்கும்போது அதில் இருந்த நாகம் அவனைக் கடித்த்து. அப்பர் அமுது செய்யத் தீங்கு நேருமே என்று எண்ணியவன் விரைந்தோடி வந்தான். \ 1471     \ 5.1.205
 • இலையைத் தாயின் கையில் கொடுக்கும்போது விடம் தலைக்கு ஏறியதால் மயங்கி விருந்தான். உண்மை தெரிந்தால் அப்பர் உணவு உண்ணமாட்டாரே என்று அப்பூதி அடிகளும் அவரது மனைவியும் மறைத்தனர். \ 1472 \ 5.1.206
 • செயலில் தடுமாற்றம் இன்றிக் கணவனும் மனைவியும் அப்பரை உணவு உண்ண வேண்டினர். எனினும் உள்ளத் தடுமாற்றத்தை இறையருளால் அப்பர் உணர்ந்துகொண்டார். \ 1473 \ 5.1.207
 • மகனைக் கோயிலுக்குக் கொண்டுவரும்படிச் செய்து – ஒன்றகொலாம் – என்று தொடங்கிப் பதிகம் பாடினார். விடம் இறங்கி மகன் எழுந்திருந்தான். \ 1474 \ 5.1.208
 • மகன் உயிர் பெற்றது கண்டு பெற்றோர் மகிழ்ந்தனர். அப்பர் அமுது செய்யக் காலம் தாழ்ந்ததற்கு வருந்தினர். பின்னர் அப்பர் அமுது செய்தார். \ 1475 \ 5.1.209
 • திங்களூரிலிருந்து அப்பர் திருப்பழனம் சென்று பாடினார். \ 1476 \ 5.1.210
 • அப்பூதி அடிகளைச் சிறப்பித்துச் சொன்மாலை பாடினார். \ 1477 \ 5.1.211
 • திருச்சோற்றுத்துறை சென்று தொண்டு செய்தார். \ 1478 \ 5.1.212
 • பின் தன் தலைமேல் அடி வைத்த சிவனை எண்ணித் திருநல்லூர் வந்தார். \ 1479 \ 5.1.213
 • திரு ஆரூர் தொழ நினைத்தார். \ 1480 \ 5.1.214

பாடல்

1471 
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே
பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம்
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள
ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான்     5.1.205

1472 
தீய விடம் தலைக்கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத்
தாய கரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம்
மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம்
தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார்     5.1.206

1473 
தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி
எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார்     5.1.207

1474 
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க்
கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே
ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப்
பின்றை விடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான்  5.1.208

1475 
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது
இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க
வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர்
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள்    5.1.209

1476 
திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப்
பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து
பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார்   5.1.210

1477 
புடை மாலை மதிக் கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ்
அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை
நடை மாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார்     5.1.211

1478 
எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும்
தொழும் பணி மேற்கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத்
தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச்
செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார்     5.1.212

1479 
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த
ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து
சேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று
கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார்   5.1.213

1480 
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது
பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள்
தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு
செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார்     5.1.214
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி