Saturday, 20 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1470


அப்பூதி அடிகள்
 • நல்லூரை வணங்கிய நாவுக்கரசர் சிவன் திருவடி தன் தலைமேல் இருக்க வேண்டும் என விரும்பினார். நாவுக்கரசர் உறங்கும்போது சிவன் அவர் விருப்பத்தை நிறைவேற்றினார். \ 1461 \ 5.1.195
 • நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார் என்று தாண்டகம் பாடினார். \ 1462 \ 5.1.196
 • திருப்பணிகள் பலவும் செய்துவந்தார். \ 1463 \ 5.1.197
 • கருகாவூர், திருவாவூர், திருப்பாலைத்துறை, - சென்று பாடி – பின்னும் திருநல்லூர் வந்தார். \ 1464 \ 5.1.198
 • திருப்பழனம் சென்று பாடினார். \ 1465 \ 5.1.199
 • பின்னர் அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் வாழும் திங்களூர் சென்றார். \ 1466 \ 5.1.200
 • அப்பூதி அடிகள் உணவுச்சாலை, நீர்க் கால்வாய், குளம், தண்ணீர்ப் பந்தல் – முதலானவற்றை “திருநாவுக்கரசர்” பெயரால் அமைத்து அறம் செய்வதைக் கண்டு அப்பூதி அடிகள் இல்லத்துக்குச் சென்றார். \ 1467 \ 5.1.201
 • அப்பூதி அடிகளும், அவரது மனைவியும், மகனும் அப்பரைத் தொழுது மகிழ்ந்தனர். தம் இல்லத்தில் உணவருந்துமாறு வேண்டினர். நாவுக்கரசரும் ஒப்பினார். \ 1468 \ 5.1.202
 • உணவும், போனகமும், கறியமுதும் அமிழ்தாம்படிச் சமைத்தனர். \ 1469 \ 5.1.203
 • உணவு படைக்க வாழையிலைக் குருத்து அறுத்து வரும்படி அப்பூதி அடிகளின் மகன் “திருநாவுக்கரசு” என்பவனை அனுப்பினர். 1470 \ 5.1.204

பாடல்

1461 
நன்மை பெருக அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின்
மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை முடிகின்றோம் என்று அவர்தம்
சென்னிமிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான்
5.1.195

1462 
நனைந்து அனைய திருவடி என் தலைமேல் வைத்தார் என்று
புனையும் திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்துப் புனிதர் அருள்
நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத
தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார்
5.1.196

1463 
நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால்
மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து
பாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித்
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகிச் செல்லு நாள்    5.1.197

1464 
கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்து அருளும்
திருவாவூர் திருப்பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப்
பெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந் திருநல்லூர்
ஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார் 5.1.198

1465 
ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய்
வாளை பாய் புனல் பழனத் திருப்பழனம் மருங்கு அணைந்து
காள விடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டு
நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் 5.1.199

1466 
அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும்
ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்து அணைவார்
மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார்
செப்பருஞ் சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர்  5.1.200

1467 
அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப்
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண     5.1.201

1468 
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்
சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக்
கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப்
பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார்   5.1.202

1469 
காண் கைமை இன்றியும் முன் கலந்த பெருங் கேண்மையினார்
பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும்
வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால்
ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து 5.1.203

1470 
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம்
பெருநாமம் சாத்திய அப் பிள்ளைதனை அழைத்து அன்பு
தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண் கதலிக்
குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனி விட்டார்  5.1.204
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி