Friday, 19 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1450


அப்பரே என்று ஞானசம்பந்தர் அழைத்தது
  • அரியானை – என்று தொடங்கி, எளியானை – என்று குறிப்பிட்டு, நாவுக்கரசர் திருத்தாண்டகம் பாடினார். \ 1441 \ 5.1.175
  • செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் – என்னும் தமிழ்மாலை பாடினார். \ 1442 \ 5.1.176
  • கடையுகத்தில் உலகம் அழிந்தபோது கழுமலம் என்னும் சீர்காழி நீரில் மிதந்தது. அவ்வூரில் பிறந்த பிள்ளையார் சம்பந்தர், ஞானத்தைக் குழைத்து உமை ஊட்டிய பாலை உண்டு பாடிய பாடலை, அடியார் உரைப்பக் கேட்டார். \ 1443 \ 5.1.177
  • வியந்தார். அவரது காலடிகளை வணங்க விரும்பினார். \ 1444 \ 5.1.178
  • வரும் வழியில் திருநாரையூர் பணிந்து தமிழ் பாடினார். \ 1445 \ 5.1.179
  • அடியாரோடு திருப்புகலி / சீர்காழி வந்தார். \ 1446 \ 5.1.180
  • நாவுக்கரசு வருவது கேட்டுப் பிள்ளையார் ஞான சம்பந்தரும் அடியார் புடைசூழ எதிர்கொள்ள வந்தார். \ 1447 \ 5.1.181
  • நாவுக்கரசு ஞானசம்பந்தரைப் பணிந்தார். காலடியில் விழுமுன் சம்பந்தர் அரசு கைகளைப் பற்றிக்கொண்டு “அப்பரே” என்றார். \ 1448 \ 5.1.182
  • இருவரும் இணைந்த காட்சி கண்ட அடியார்கள் சிவம் பெருக “அரகர” என ஒலி எழுப்பினர். \ 1449 \ 5.1.183
  • ஒருவரை ஒருவர் வணங்கி மகிந்து உவப்புடன் தங்கியிருந்தனர். \ 1450 \ 5.1.184

பாடல்

1441 
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை
பிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி
விரியா நின்று எவ் உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல்
புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார்
5.1.175

1442 
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை
அஞ்சொல் வளத் தமிழ் மாலை அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சு உருகப் பொழி புனல் வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்
தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில்
5.1.176

1443 
கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழு மலத்தின் இருந்த செம்கண்
விடை உகைத்தார் திரு அருளால் வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும்
அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த
உடை மறைப் பிள்ளையார் திரு வார்த்தை அடியார்கள் உரைப்பக் கேட்டார்
5.1.177

1444 
ஆழி விடம் உண்ட வரை அம்மை திருப்பால் அமுதம் உண்டபோதே
ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன் எம்மான் எனக் காட்டி இயம்ப வல்ல
காழி வரும் பெரும் தகை சீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர
வாழி அவர் மலர்க் கழல்கள் ணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த
5.1.178

1445 
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப்
பொய்ப்பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி புரண்டு வலம் கொண்டு போந்தே
எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திரு நாரையூர் பணிந்து பாடிச் செல்வார்
5.1.179

1446 
தொண்டர் குழாம் புடை சூழத் தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம்
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத்
தெண் திரைவாய்க் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும்
வண்தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்
5.1.180

1447 
நீண்ட வரை வில்லியார் வெஞ் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள்
ஆண்ட அரசு எழுந்ருளக் கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும்
காண்டகைய பெருவிருப்புக் கைம் மிக்க திரு உள்ளக் கருத்தினோடு
மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ எழுந்து அருளி முன்னே வந்தார்
5.1.181

1448 
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று
பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்தவர் தம் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க்கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார் தம்மை
அழுது அழைத்துக்கொண்டவர் தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார்
5.1.182

1449 
அம்பிகை செம் பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு அரசர் எனச் சிறந்த சீர்த்தி
எம் பெருமக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம் பெருகும் ஒலி நிறைத்தார் உலகம் எல்லாம்
5.1.183

1450 
பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமை வணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மையோடும்
வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்
5.1.184
சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி