Thursday, 18 July 2019

பெரியபுராணம்திருநாவுக்கரசர்Tirunavukkarasar1390


யானைக் காலால்
 • யானை நாவுக்கரசை நோக்கி வந்த்து. நாவுக்கரசர் பதிகம் பாடினார். \ 1381 \ 5.1.115
 • வீரட்டானர் அடியோம். அஞ்சுவது இல்லை – என்ற பதிகம் பாடினார். \ 1382 \ 5.1.116
 • நாவுக்கரசர் தமிழ்மாலை பாடியதும் கொல்ல வந்த யானை அவரை வலம்வந்து தொழுதுவிட்டுத் திரும்பியது. \ 1383     \ 5.1.117
 • பாகன் யானையை அடக்கி மீண்டும் ஏவினான். அது பாகனைக் கொன்றுவிட்டு, அமணரைத் தாக்க ஓடியது. \ 1384 \ 5.1.118
 • பலரைக் கொன்று அரசனுக்குத் துன்பம் உண்டாக்கியது. \ 1385 \ 5.1.119
 • யானையிடம் பிழைத்த அமணர் மன்ன்ன் காலில் விழுந்தனர். மன்னன் இனி என்ன செய்யலாம் என வினவினான். \ 1386 \ 5.1.120
 • பங்கப் படுத்த வேண்டும் என்றனர். \ 1387 \ 5.1.121
 • கல்லை அவனுடன் கட்டிக் கடலில் எறிய வேண்டும் – என்றனர். \ 1388 \ 5.1.122
 • அவ்வாறே செய்து படகில் கொண்டு சென்று கடலில் வீசுமாறு அரசன் ஆணையிட்டான் \ 1389 \ 5.1.123
 • வினையாளர் மன்னன் சொன்னபடிச் செய்து முடித்தனர். \ 1390 \ 5.1.124
பாடல்

1381 
அண்ணலருந் தவவேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு
விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச்
சுண்ண வெண்சந்தனச் சாந்து தொடுத்த திருப்பதிகத்தை
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார்   5.1.115

1382 
வஞ்சகர் விட்ட சினப் போர் மத வெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார்
வெம்ஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம் அடியோம் நாம்
அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார் 5.1.116

1383 
தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக்
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் 5.1.117

1384 
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத்
தூண்டிய மேல் மறப்பாகர் தொடக்கி அடித்துத் திரிந்து
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே 5.1.118

1385 
ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து
நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தர கிரி போல
ஆடி அவ்யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே    5.1.119

1386 
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகித்
தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான் 5.1.120

1387 
நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர்
பங்கப் படுத்து அவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப்
பொங்கு அழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார்     5.1.121

1388 
அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான்
தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைவித்தவன் தன்னைச்
சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார் 5.1.122

1389 
ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப்
பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில்
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான் 5.1.123

1390 
அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த
வெவ் வினையாளரும் சென்று மேவிட நாவுக்கரசர்
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப் பாதகர் 5.1.124
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி