Wednesday, 17 July 2019

பெரியபுராணம்திருநாவுக்கரசர்Tirunavukkarasar1370


நீற்று அறையில் இடல்
 • பல்லவ அரசன் ஆணைப்படிப் படையுடன் அமைச்சர்கள் படையுடன் திருவதிகையிலிருந்த நாவுக்கரசரிடம் சென்றனர். \ 1361 \ 5.1.91
 • அரசன் நும்மை அழைத்துவரச் சொன்னான் என்றனர். \ 1362 \ 5.1.92
 • நாம் ஆர்க்கும் குடி அல்லோம் – என்ற தொடங்கும் திருத்தாண்டகம் பாடினார். நீர் அழைக்க யாம் வரமாட்டோம் – என்றார். \ 1363 \ 5.1.93
 • செய்தியைச் சினவேந்தனுக்குத் தெரிவித்தனர். வினை விளைவுகளுக்குச் சிவன் இருக்கிறான் – என்று எண்ணிக்கொண்டு திருநாவுக்கரசர் இருந்துவிட்டார் \ 1364   
 • செய்தியைக் கேட்ட பல்லவன் என்ன செய்வதென்று பாயை ஆடையாக உடுத்த அமணரை வினவினான். \ சுண்ணாம்பு காய்ச்சும் காளவாயில் அவரை இடலாம் – என்றனர். \ 1365 
 • அவ்வாறே செய்யும்படி அரசன் ஆணையிட்டான். அதன்படியே திருநாவுக்கரசர் நீற்றறையில் அடைக்கப்பட்டார். \ 1366  
 • திருநாவுக்கரசர் சிவனையே தொழுதுகொண்டு இருந்தார் \ 1367  
 • நிலவு ஒளியில் கழுநீர் மலர் பூத்திருக்கும் குளத்தில் தென்றல் வீசுவது போன்று அந்த நீற்றறை திருநாவுக்கரசுக்குக் குளுமையாக இருந்தது. \ 1368
 • ஈசனை நினைத்துக்கொண்டு இனிமையாக நீற்றறையில் அவர் இருந்தார் \ 1369   
 • 7 நாள் ஆயிற்று. திறந்து பாருங்கள் என்றான், மன்னன். திறந்தனர். \ 1370
பாடல்

1361 
அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து
விரை செறியும் சோலை சூழ் திருவதிகைதனை மேவி
பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார்     5.1.91

1362 
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து
மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் 5.1.92

1363 
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின்
கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத்
தேமாலைச் செந்தமிழின் செழும் திருத்தாண்டகம் பாடி
ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார்     5.1.93

1364 
ஆண்டரசு அருள்செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி
வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார்
மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார்     5.1.94

1365 
பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை
வல்அமணர்தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச்
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத
புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார் 5.1.95

1366 
அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப்
பெருகு சினக் கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையை
உருகு பெரும் தழல் வெம்மை நீற்றுஅறையின் உள் இருத்தித்
திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார் 5.1.96

1367 
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத்
தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று
மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார்   5.1.97

1368 
வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம்
தை வரும் தண் தென்றல் அணை தண்கழுநீர்த் தடம் போன்று
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே   5.1.98

1369 
மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப்
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை
ஈசனை எம் பெருமானை எவ் உயிரும் தருவானை
ஆசை இல்ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார்   5.1.99

1370 
ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வு இல் அமணரை அழைத்துப்
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும்
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர்
தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள்    5.1.100
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி