Monday, 15 July 2019

பெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 1300


புகழனார், மாதினியார், கலிப்பகையார் - இறப்பு
 • மருணீக்கியார் தன் தந்தை மகிழுமாறு கல்வி பயின்று இளம்பிறை போல் வளர்ந்துவந்தார் \ 1291 \ 5.1.21
 • அப்போது திலகவதியாருக்கு 12 ஆண்டு வந்தது \ 1292 \ 5.1.22
 • அவரை மணந்துகொள்ள விரும்பிய கலிப்பகையார் என்பவர் பெண் கேட்டுவரப் பெருமக்களைப் புகழனாரிடம் அனுப்பினார் \ 1293 \ 5.1.23
 • புகழனார் தன் மகளை மணம் முடித்துத் தர ஒப்பினார் \ 1294 \ 5.1.24
 • திருமணம் நடைபெறுவதற்கு முன்னர் வடபுல அரசன் ஒருவனோடு போர் புரியக் கலிப்பகையார் செல்லவேண்டியதாயிற்று \ 1295 \ 5.1.25
 • படையுடன் சென்ற கலிப்பகையார் நீண்ட காலம் போர் புரிய வேண்டியதாயிற்று \ 1296 \ 5.1.26
 • இடைக்காலத்தில் திலகவதியாரின் தந்தை புகழனார் காலமானார் \ 1297 \ 5.1.27
 • அதன் பின்னர் புகழனார் மனைவி மாதினியாரும் காலமானார் \ 1298 \ 5.1.28
 • அதனால் திலகவதியாரும், மருணீக்கியாரும் துயரில் ஆழ்ந்தனர் \ 1299 \ 5.1.29
 • உறவினர் அவர்களைத் தேற்ற இருவரும் வாழ்ந்துகொண்டிருந்தபோது கலிப்பகையாரும் போரில் மாண்டார் \ 1300 \ 5.1.30
பாடல்

1291 
தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால்
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம்
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார்     5.1.21

1292 
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின்
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர்
மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார்
பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார்   5.1.22

1293 
ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார்
காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார்
பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள
வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார்    5.1.23

1294 
அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு
மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக்
குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார்  5.1.24

1295 
கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார்
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன்
மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல்
அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார்  5.1.25

1296 
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில்
காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை
நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார் 5.1.26

1297 
ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த
தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை
மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத்
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார்     5.1.27

1298 
மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார்
சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப்
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்
கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார்  5.1.28

1299 
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின்
மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த
காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால்
பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார்  5.1.29

1300 
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து
பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார்
மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார்
பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார்     5.1.30
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி