Monday, 15 July 2019

பெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 1290


திலகவதியார், மருணீக்கியார் பிறப்பு
  • திருமுனைப்பாடி நாடு நாவுக்கரசும், சுந்தரரும் பிறந்த பெருமை கொண்டது \ 1281 \ 5.1.11
  • இந்த நாட்டில் சைவநெறி பாலிக்கும் ஊர் திருவாமூர் (ஆமூர்) \ 1282 \ 5.1.12
  • இந்த ஊரில் அணங்குகள் என்று சொல்லும்படி மகளிர் போற்றும் பெருங்குடிகள் சிறந்து விளங்கின \ 1283 \ 5.1.13
  • உழவர் வாழும் இந்த ஊர் வளங்கள் மிக்கது \ 1284 \ 5.1.14
  • இந்த ஊரில் குறுக்கையர் குடி வேளாண் குலத்தில் மேம்பட்டு விளங்கியது. \ 1285 \ 5.1.15
  • இந்தக் குடியின் பெருமகனார் புகழனார் \ 1286 \ 5.1.16
  • புகழனார் மனைவி மாதினியார் வயிற்றில் தோன்றித் திலகவதியார் என்னும் பெண்மணி பிறந்தார் \ 1287 \ 5.1.17
  • திலகவதி பிறந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் மருள்-நீக்கியார் (மருணீக்கியார்) பிறந்தார் \ 1288 \ 5.1.18
  • தந்தை புகழனார் மகனுக்கு மங்கல விழாக்கள் நடத்திப் பாராட்டினார் \ 1289 \ 5.1.19
  • குழவிப் பருவம் நீங்கிய மகனுக்குத் தந்தை மயிர்நீக்கும் விழா நடத்தினார். பள்ளியில் பயிலச் செய்தார். \ 1290 \ 5.1.20

பாடல்

1281 
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி
அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும்
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில்
சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு   5.1.11

1282 
இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும்
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள்
சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால்
தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர்   5.1.12

1283 
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி
ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம்
நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள்  5.1.13

1284 
மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும்
அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும்
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும்
கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள்    5.1.14

1285 
தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண்
விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க நல்வேளாண்
குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும்    5.1.15

1286 
அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார்
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார்
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார்
திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் 5.1.16

1287 
புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண்
மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்
நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில்
திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார்   5.1.17

1288 
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின்
அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின்
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்  5.1.18

1289 
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகனார்
காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள்
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன்
ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார்  5.1.19

1290 
மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும்
தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின்
பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த
சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார்    5.1.20

சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி