Tuesday, 16 July 2019

பெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 1350


நாவுக்கரசு - என்னும் பெயர் பெற்றது
 • பதிகம் பாடியதும் மருணீக்கியாரை வாட்டிய சூலை நோய் நீங்கியது. மருள்நீக்கியார் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார். \ 1341 \ 5.1.71
 • மகிழ்ச்சியில் கண்ணீர் பெருக, தரையில் விழுந்து புரண்டார். \ 1342 \ 5.1.72
 • புறத்துறையில் வீழாமல் சூலை நோய் தந்து ஆட்கொண்ட அருளுக்கு என்ன கைம்மாறு செய்வேன் – என்று சொல்லித் தொழுதார். \ 1343 \ 5.1.73
 • பதிகம் பாடியதால் இனி “நாவுக்கரசு” / நாவுக்கு அரசு என்று உன் பெயர் விளங்கட்டும் – என்று ஒரு குரல் கேட்டது. \ 1344 \ 5.1.74
 • தீவினையேன் அடையும் திரு இதுவோ – என்று வணங்கினார். \ 1345 \ 5.1.75
 • மருணீக்கியார் நாவுக்கரசு ஆனதை மக்கள் இசை முழக்கத்துடன் கொண்டாடினர். \ 1346 \ 5.1.76
 • நாவுக்கரசு = வாகீசர் \ சிவச்சின்னம் தரித்துக்கொண்டார். (கோயிலில் முளைக்கும் புதர்களை வெட்டித் தூய்மை செய்வதற்காகக்) கையில் உழவாரப்படை ஏந்திய வண்ணம் எங்கும் சென்றார். \ 1347 \ 5.1.77
 • என்னைப் போல் இறையருள் பெற்றவர் யார் – என்று இறைவனை வணங்கினார். \ 1348 \ 5.1.78
 • தருமசேனர் இடர் நீங்கிய செய்தியைப் பாடலிபுரத்தில் இருந்த சமணர் கேட்டு மனம் புழுங்கினர். \ 1349 \ 5.1.79
 • தம் சமயம் வீழ்ந்துபடுமே என்று மருண்டனர். \ 1350 \ 5.1.80

பாடல்

1341 
மன்னும் பதிகம் அது பாடியபின்
வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான்
அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும்
அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச்
செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம்
திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர்
முன் நின்ற தெருட்சி மருட்சியினால்
முதல்வன் கருணைக் கடல் மூழ்கினாரே
5.1.71

1342 
அங்கங்கள் அடங்க உரோமம்
எலாம் அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப்
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து
இழியப் புவி மீது விழுந்து புரண்டு அயர்வார்
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு
அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின்
தங்கும் கருணைப் பெரு வெள்ளம்
இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார்
5.1.72

1343 
பொய் வாய்மை பெருக்கிய
புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம்
அவ்வாழ் குழியின் கண் விழுந்து
எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்
மை வாச நறும் குழல் மா மலையாள்
மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும்
இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு
எதிர்செய் குறை என் கொல் எனத் தொழுவார்
5.1.73

1344 
மேவுற்ற இவ் வேலையில்
நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப்
பதிகத் தொடைபாடிய பான்மையினால்
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும்
நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான்
இடையே ஒருவாய்மை எழுந்ததுவே
5.1.74

1345 
இத் தன்மை நிகழ்ந்துழி
நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள்
சித்தம் திகழ் தீவினையேன் அடையும்
திருவோ இது என்று தெருண்டு அறியா
அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு
அருளும் கருணைத் திறமான அதன்
மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே
மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே
5.1.75

1346 
பரசும் கருணைப் பெரியோன்
அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து
அரசு இங்கு அருள் பெற்று உலகு
உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ்
முழவம் கிளை துந்துபி கண்டை உடன்
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால்
நெடு மா கடல் என்ன நிறைந்துளதே
5.1.76

1347 
மையல் துறை ஏறி மகிழ்ந்து
அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய் உற்ற திருப்பணி செய்பவராய்
விரவும் சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறா உணர்வும்
ஈறு இன்றி எழும் திருவாசகமும்
கையில் திகழும் உழவாரமுடன் கைக்
கொண்டு கலந்து கசிந்தனரே
5.1.77

1348 
மெய்ம்மைப் பணி செய்த
விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில்
தம் இச்சை நிரம்ப வரம் பெறும்
அத் தன்மைப் பதி மேவியதா பதியார்
பொய்மைச் சமயப் பிணி விட்டவர்
முன் போதும் பிணி விட்டருளிப் பொருளா
எம்மைப் பணிகொள் கருணைத் திறம்
இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே
5.1.78

1349 
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில்
புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய்     5.1.79

1350 
தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப்
பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார்
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார்  5.1.80
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி