Tuesday, 16 July 2019

பெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 1340


கூற்றாயினவாறு விலக்ககில்லீர் - பதிகம் பாடல்   
 • மருணீக்கியார் இரவில் சமணர் யாருக்கும் தெரியாமல் இருந்த சமணர் குகையை விட்டுவிட்டு, வெள்ளை ஆடை உடுத்திக்கொண்டு மாதவர் வாழும் திருவதிகை வந்தடைந்தார். \ 1331 \ 5.1.61
 • திலகவதியார் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். \ 1332 \ 5.1.62
 • “சூலை நோய் வாட்டுகிறது. நீங்கிக் கரையேற அருளவேண்டும்” என்று அக்கா காலடியில் விழுந்து வேண்டினார். 1333 \ 5.1.63
 • “பர சமயக் குழியிலிருந்து எழுந்தீர்” என்று திலகவதியார் கூறினார். \ 1334 \ 5.1.64
 • “சிவன் அருளைக் காண்பாய். சிவத்தொண்டு செய்க” என்று தம்பிக்குக் கூறினார். \ 1335 \ 5.1.65
 • ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதித் திருநீற்றைத் தம்பிக்குக் கொடுத்தார். \ 1336 \ 5.1.66
 • தம்பி திருநீற்றை அணிந்துகொண்டார். \ 1337 \ 5.1.67
 • தமக்கையார் தம் விளக்குமாறு, மெழுகும் சாணம், தண்ணீர்க் குடம் ஆகியவற்றுடன் தம்பியை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு உள்ளே சென்றார். \ 1338 \ 5.1.68
 • தம்பி கோயிலை வலம்வந்து உள்ளே நுழைந்து, தரையில் விழுந்து வணங்கினார். சிவன் அருளால் தமிழ்மாலை சாத்தும் உணர்வு அவருக்கு அப்போது தோன்றியது. \ 1339 \
 • “கூற்றாயினவாறு விலக்ககில்லீர்” என்னும் பதிகம் பாடினார். \ 1340 \ 5.1.70
பாடல்

1331 
பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து
கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண்
செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் 5.1.61

1332 
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக்
குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று
இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில்
திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார்     5.1.62

1333 
வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர்
இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது
உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து   5.1.63

1334 
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது
கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது
மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார்   5.1.64

1335 
மற்ற வுரை கேட்டலும் ஏ மருண் நீக்கியார் தாமும்
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர்
கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர்
பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார் 5.1.65

1336 
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து
சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக்
குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார் 5.1.66

1337 
திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப
பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்ற அங்கு
உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி
தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார்  5.1.67

1338 
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும்
மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய்
சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார் 5.1.68

1339 
திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக
வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித்
தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால்
உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார்  5.1.69

1340 
நீற்றால் நிறைவாகிய மேனியுடன் நிறைன்புறு சிந்தையில் நேசம் மிக
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான்
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோதில் திருப்பதிகம்
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர் நின்று புகன்றனரால் 5.1.70
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி