Tuesday, 16 July 2019

பெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 1330


திலகவதியாரிடம் வர எண்ணியது
 • தருமசேனர் என்னும் மருணீக்கியார் தன் வயிற்றில் தொன்றிய சூலை நோயைத் தம் அமண சமய வித்தைகளைச் செய்து போக்க முயன்றார். அந்த வித்தை வைத்தியங்களால் அந்தச் சூலைநோய் மேலும் அதிகரித்தது. எனவே வருந்தினார். \ 1321 \ 5.1.51
 • இதனைக் கண்ட சமண முனிவர்கள் இவரது நோய் தீரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு சால்பு அல்லாத தவம் செய்யலாயினர். \ 1322 \ 5.1.52
 • சமணர் தலைவன் மந்திரித்த நீரைப் பருகச் செய்தான். மயில் இறகால் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் தடவி விட்டான். இதனால் நோய் பெருகிற்றே தவிரத் தணிந்தபாடில்லை. \ 1323 \ 5.1.53
 • “இது நம்மால் போக்க முடியாததாக உள்ளது” என்று சமணர்கள் அயர்ந்தனர். \ 1324 \ 5.1.54
 • சமணக் குண்டர்கள் கைவிட்டனர். அப்போது அவர் அக்கா திலகவதியார் நினைவு ஒருவனுக்கு வந்தது \ 1325 \ 5.1.55
 • அவன் திருவதிகை வந்தனர். திலகவதியாரைக் கண்டான். தீங்கேதும் உளதோ என்று திலகவதியார் வினவினார். வந்தவன் கூறலானான். \ 1326 \ 5.1.56
 • “சூலை நோய். எல்லாரும் கைவிட்டார். உய்யும்படி அருள வண்டும்” – என்றான். 1327 \ 5.1.57
 • “நான் அமண் பாழிக்கு வரமாட்டேன்” என்று திலகவதியார் கூறிவிட்டார். \ 1328 \ 5.1.58
 • இந்தச் செய்தியைத் தூதன் தருமசேனரிடம் தெரிவித்தான். தருமசேனர் தன் அக்காவிடம் தான் செல்வதென முடிவெடுத்தார். \ 1329 \ 5.1.59
 • உடனே, உடுக்கும் பாய், உணவு வாங்கும் உறி, குண்டிகை, பிலி ஆகியவற்றை அங்கேயே விட்டுவிட்டு அக்காவிடம் செல்ல எழுந்தார். \ 1330 \ 5.1.60

பாடல்

1321 
அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும்
விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம்
நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார்   5.1.51

1322 
அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக்
கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார்
தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார்     5.1.52

1323 
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது
குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை
கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும்
பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார்  5.1.53

1324 
தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி
ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய்
ஆ! ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப்
போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று  5.1.54

1325 
குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு
மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப்
பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக்
கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த 5.1.55

1326 
ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார்
பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத்
தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் 5.1.56

1327 
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை
எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த
நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு
அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான்  5.1.57

1328 
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து
நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம்
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய
அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் 5.1.58

1329 
அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச்
செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என   5.1.59

1330 
எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி
அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத்
தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார் 5.1.60
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்
No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி