Tuesday, 16 July 2019

பெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 1320


தருமசேனர் - மருணீக்கியார் வயிற்றில் சூலை நோய்
  • மருணீக்கியார் சமண நெறியில் சிறப்புற்று விளங்கிய காலத்தில், திலகவதியார் தம் தொன்மையான தூய சைவ நெறியில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினார். \ 1311 \ 5.1.41
  • கெடில ஆற்றின் வட கரையில் உள்ள திருவதிகை வீரட்டானம் சென்றார். \ 1312 \ 5.1.42
  • அக் கோயில் சிவபெருமானுக்குத் தன் கைகளால் தொண்டாற்றி வந்தார். \ 1313 \ 5.1.43
  • பொழுது புலர்வதன் முன் கோயிலைப் பெருக்கித் தூய்மை செய்வது, தரையைச் சாணத்தால் மெழுகுவது, மலர் பறித்து மாலைகள் தொடுத்துத் தருவது முதலான பணிகளைச் செய்துவந்தார். \ 1314 \ 5.1.44
  • அப்போது தன் தம்பி வேறு சமய நெறியில் இருப்பதை எண்ணி வருந்தினார். \ 1315 \ 5.1.45
  • “என்னை ஆண்டருளுபவர் நீ ஆகில், என் தம்பியைப் பர சமயக் குழியிலிருந்து மீட்டுத் தர வேண்டும்” என்று இறைவனிடம் பலமுறை விண்ணப்பம் செய்தார். \ 1316 \ 5.1.46
  • தவம் என்று சொல்லித் தலையில் உள்ள மயிரை ஒவ்வொன்றாகப் பிடுங்கிக்கொண்டு வாழும் அவ நெறியில் என் தம்பி வீழாமல் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினார். \ 1317 \ 5.1.47
  • “கவலை ஒழி. உன் தம்பி முன்னமே முனிவனாகி என்னை அடையத் தவம் செய்தான். அவன் சூலை நோயில் துன்புற்று என்னை அடைவான்” – என்று திலகவதியார் கனவில் தோன்றிச் சிவபெருமான் கூறினார். \ 1318 \
  • பண்டு செய்த தவத்தின் பயனாய்ச் சிவபெருமான் அருள மருள்நீக்கியார் வயிற்றில் சூலை நோய் தோன்றி அவரைத் துன்புறுத்தியது \ 1319 \ 5.1.49
  • வடவைத்தீ, கொடுவிடம், வச்சிரம் – போலத் தருமசேனர் வயிற்றில் தோன்றிய சூலை நோய் அவர் குடலை வருத்தியது. வலி தாங்க முடியாமல் சமணர் குகையில் மயங்கி விழுந்தார். \ 1320 \ 5.1.50

பாடல்

1311 
அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச்
செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும்
தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ
நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார்   5.1.41

1312 
பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால்
ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார்
நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும்
சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் 5.1.42

1313 
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக்
குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம்
அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால்
துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார் 5.1.43

1314 
புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப்
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் 5.1.44

1315 
நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில்
கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார்
கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு
மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து  5.1.45

1316 
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை
ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை
ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள
வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் 5.1.46

1317 
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும்
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச்
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப்
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார்    5.1.47

1318 
மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார்
உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான்
முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான்
அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வான் என அருளி 5.1.48

1319 
பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும்
தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக்
கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால்  5.1.49

1320 
அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது
வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம்
கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப்
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார்  5.1.50

சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி