Monday, 29 July 2019

பெரியபுராணம் \ திருநீலநக்கர் \ ThiruNilaNakkar 1870

திருநீல கண்ட யாழ்ப்பாணருடன் பள்ளிகொண்டார்.

 • உணவு உண்ட பின்னர் ஞானஞம்பந்தர் அழைக்க நீலநக்கர் வந்து பணிந்தார். \ 1861 
 • பெரும்பாணர் தங்க இடம் தருக - என்றார். வேதி (Hall)யில் இடம் தந்தார். \ 1862 
 • நீலகண்டர் சகோட யாழ் இசையின் தலைவர். தீ வலம் செய்த பின்னர் நீலகண்டருடன் பள்ளி கொண்டார். \ 1863 
 • விடிந்த பின் அயவந்தி சென்ற சம்பந்தர் நீலநக்கரைச் சிறப்பித்துப் பதிகம் பாடினார். \ 1864 
 • நீலநக்கருக்குத் தன் நட்பினை வழங்கிய ஞானசம்பந்தர் பல ஊர்களுக்கும் சென்றார். \ 1865 
 • பிள்ளையாரைப் பிரிய மனமில்லாதவராக, ஒருவாறு அமைதி பெற்றார். \ 1866 
 • வழக்கம் போல் திருத்ததொண்டு செய்துகொண்டு நீலநக்கர் வாழ்ந்தார். \ 1867 
 • பிள்ளையார் செல்லும் இடங்களுக்கெல்லாம் தாமும் சென்று வழிபட்டு நட்பை வெளிப்படுத்தினார். \ 1868 
 • ஞானசம்பந்தர் திருமணத்தில் பங்கு கொண்டு சிவனடி சேர்ந்தார். \ 1869 
 • அடுத்து நமிநந்தி தொண்டு பற்றிச் சொல்வேன். \ 1870 

திருச்சிற்றம்பலம்
பாடல்

1861 
சீல மெய்த் திருத் தொண்டரோடு அமுது செய்து அருளி
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர் அழைத்திடக் கடிது
நீல நக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார்    5.6.29

1862 
நின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்கு
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்ச்
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர்    5.6.30

1863 
ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர
தாங்கு நூலவர் மகிழ் உறச் சகோட யாழ்த் தலைவர்
பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார்     5.6.31

1864 
கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர்
அங்கு நின்று எழுந்து அருளுவார் அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீல நக்கரைச் சிறப்பித்தே
பொங்கு செந்தமிழ் திருப்பதிகத் தொடை புனைந்தார் 5.6.32

1865 
பதிக நான் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி
அதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்து அருளி
எதிர் கொளும் பதிகளில் எழுந்து அருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார்    5.6.33

1866 
பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும்
வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார்    5.6.34

1867 
மேவு நாளில் அவ் வேதியர் முன்பு போல் விரும்பும்
தாவில் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்பச்
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறைச் சிறுவர்
பூவடித் தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார் 5.6.35

1868 
சண்பை ஆளியார் தாம் எழுந்து அருளும் எப் பதியும்
நண்பு மேம்பட நாள் இடைச் செலவிட்டு நண்ணி
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார்
திண் பெரும் தொண்டர் ஆகிய திரு நீலக்கர்  5.6.36

1869 
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க
வருபெரும் தவ மறையவர் வாழி சீகாழி
ஒருவர் தம் திருக் கல்லியாணத்தினில் உடனே
திருமணத் திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார்   5.6.37

1870 
தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில்
வருமுதல் பெரும் திருநீல நக்கர் தாள் வணங்கி
இரு பிறப்புடை அந்தணர் ஏறுயர்த்தவர் பால்
ஒருமை உய்த்துணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம்  5.6.38

திருச்சிற்றம்பலம்

 • சேக்கிழார் தமிழ் தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.06. திரு நீல நக்க நாயனார் புராணம்  12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive

எழுத்துப் பிழை திருத்திசந்திப் பிழை திருத்தி
தமிழ் வலைப்பதிவு திரட்டி