Monday, 29 July 2019

பெரியபுராணம் \ திருநீலநக்கர் \ ThiruNilaNakkar 1860

ஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர் - வரல்

 • நீலநக்கர் தாம் கண்ட கனவினை நனவு என்றே கருதினார். விழித்து எழுந்து ஆடிப் பாடினார். சிவன் கருணையை எண்ணி அழுதார். \ 1851 
 • பொழுது விடிந்ததும் அயவந்தி கோயில் சென்று வணங்கினார். தன் மனைவியை அழைத்துஉக்கொண்டு இல்லம் மீண்டார். \ 1852 
 • வழக்கம் போல் தொண்டு செய்யலானார். \ 1853 
 • அப்போது ஞானசம்பந்தர் பூந்தராய் கோயிலை வழிபட வந்தார். \ 1854 
 • வழியில் சாத்தமங்கை வந்தார். \ 1855 
 • அவருடன் திரு நீலகண்ட யாழ்ப்பாணர் விறலியருடன் வந்தார். \ 1856 
 • தோரணங்கள் கட்டி ஊரை அழகுபடுத்தி, எதிர்கொண்டு வரவேற்கச் சென்றார். \ 1857 
 • ஆடிப் பாடி ஞானசம்பந்தரை இல்லம் அழைத்து வந்தார். \ 1858 
 • ஞானசம்பந்தரைத் தம் இல்லத்தில் அமுதுண்ணச் செய்தார். \ 1859 
 • சம்பந்தரைத் தம் இல்லத்தில் தங்கும்படிச் செய்தார். \ 1860 
பாடல்

1851 
கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக்
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்துத்
தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார்  5.6.19

1852 
போது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம்
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார்   5.6.20

1853 
பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்துஎய்த
இன்புறும் திறத்து எல்லையில் பூசனை இயற்றி
அன்பு மேம் படும் அடியவர் மிக அணை வார்க்கு
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்ப முடன் முடிப்பார் 5.6.21

1854 
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாளில்
மன்னு பூம் தராய் வரு மறைப் பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம்
சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார்     5.6.22

1855 
பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப்பருவ
மண் பெரும் தவப் பயன் பெற மருவு நல் பதிகள்
விண் பிறங்கு நீர் வேணியார் தமைத் தொழ அணைவார்
சண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார்   5.6.23

1856 
நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர்
தோடுலாங் குழல் விறலியார் உடன் வரத் தொண்டர்
கூடும் அப் பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர்     5.6.24

1857 
கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து
தோட்டலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள்
நாட்டி நீள் நடைக் காவணம் இட்டு நல் சுற்றத்து
ஈடமும் கொடு தாமும் முன் எதிர் கொள எழுந்தார் 5.6.25

1858 
சென்று பிள்ளையார் எழுந்து அருளும் திருக் கூட்டம்
ஒன்றி அங்கு எதிர் கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார்
பொன் தயங்கு நீள் மனை இடை உடன் கொண்டு புகுந்தார்    5.6.26

1859 
பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி
வள்ளலாரைத் தம் மனை இடை அமுது செய்வித்தார்    5.6.27

1860 
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணையக்
குமுத வாவியில் குளிர் மதிக் கதிர் அணை போதில்
இமய மங்கை தன் திருமுலை அமுது உண்டார் இரவும்
தமது சீர் மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார்   5.6.28


 • சேக்கிழார் தமிழ் தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.06. திரு நீல நக்க நாயனார் புராணம்  - 12 ஆம் நூற்றாண்டு நூல்No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி