Monday, 29 July 2019

பெரியபுராணம் \ திருநீலநக்கர் \ ThiruNilaNakkar 1850


சிலம்பியை ஊதியது 
 • அயவந்தி சிவனுக்கு நீலநக்கர் பூசை செய்தார். அவருக்கு வேண்டும் பொருள்களை அவரது மனைவியார் ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். \ 1841 
 • அஞ்செழுத்து மந்திரத்தை அவர் விடாமல் சொல்லிக்கொண்டிருந்தார். \ 1842 
 • அப்போது சிலந்திப் பூச்சி ஒன்று சிவன் திருமேனியில் விழுந்தது. \ 1843 
 • அதனைக் கண்ட நீலநக்கர் மனைவி தன் வாயால் ஊதி அதனைப் போக்கினார். \ 1844 
 • "அறிவில்லாதவளே! திருமேனியில் ஊதி உன் வாய் எச்சில் அதில் படும்படிச் செய்துவிட்டாயே" என்று கூறி வெகுண்டார். \ 1845 
 • மனைவி செயலை ‘அநுசிதம்’ என எண்ணினார். மனைவியை விட்டுவிடக் கருதினார். \ 1846 
 • திருமேனியில் விழுந்த சிலந்தியை வேறு எப்படியாவது போக்கியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வாயால் ஊதி எச்சில் ஆக்கிவிட்டாயே. உன்னைத் துறந்துவிட்டேன் - என்று கூறினார். \ 1847 
 • கதிரவன் மறைந்தான். தொண்டரும் வீட்டிற்குச் சென்றார். \ 1848 
 • மனைவியைக் கோயிலேயே விட்டுவிட்டுத் தனியே படுத்திருந்தார். \ 1849 
 • தயவந்தி சிவன் அவர் கனவில் தோன்றினார். உன் மனைவி எச்சில் எனக்குப் பால் ஆயிற்று. அந்த எச்சில் பட்ட சிலந்திப் பூச்சி புனிதம் பெற்று எனக்குக் கொப்புள் ஆயிற்று - என்றார். 1850 

பாடல் 

1841 
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின்
துணை மலர்க் கழல் தொழுது பூசனை செயத் தொடங்கி
இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் 5.6.9

1842 
நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்
மாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தித்
தேடு மா மறைப் பொருளினைத் தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார்  5.6.10

1843 
தொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே முதலாம்
கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலை
நிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேருச்
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி    5.6.11

1844 
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப்
பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக 5.6.12

1845 
பதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப் பந்தம்
சிதைக்கு மா தவத் திரு மறையவர் கண்டு தம் கண்
புதைத்து மற்றிது செய்தது என் பொறி இலாய் என்னச்
சுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார்   5.6.13

1846 
மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில்
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும்
நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார்    5.6.14

1847 
மின் நெடுஞ்சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர
முன் அனைந்து வந்து ஊதி வாய் நீர்ப் பட முயன்றாய்
உன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார் 5.6.15

1848 
மற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்துக்
கற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார்     5.6.16

1849 
அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான் மறைத் திரு நீல நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல் அணைப் பள்ளியில் பள்ளி கொள்கின்றார்  5.6.17

1850 
பள்ளி கொள் பொழுது தயவந்திப் பரமர் தாம் கனவில்
வெள்ள நீர்ச் சடையொடு நின்று மேனியைக் காட்டி
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழியக்
கொள்ளும் இப் புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள 5.6.18

 • சேக்கிழார் தமிழ் தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.06. திரு நீல நக்க நாயனார் புராணம்  - 12 ஆம் நூற்றாண்டு நூல்  

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி