Monday, 29 July 2019

பெரியபுராணம் \ திருநீலநக்கர் \ ThiruNilaNakkar 1840


பூசை செய்ய மனைவியுடன் கோயிலுக்கு வந்தார்
  • காவிரி நாட்டில் "சாத்த மங்கை" என்னும் ஊரில் அந்தணர் முதன்மை பெற்று விளங்கினர். \ 1833 
  • அந்த ஊரின் துறையில் அன்னமும், காவில் பூவையும் பயில்வது போல மகளிர் பயில்வர். \ 1834 
  • அந்த ஊரில் இரு பிறப்பாளர் முத்தீ வளர்ப்பர். அது நான்கு தீ என்னும்படி மகளிர் கற்புத் தீ வளர்ப்பர். \ 1835 
  • நீல நக்கர் என்னும் அந்தணர் அவ்வூரில் சிறப்புற்று விளங்கினார். \ 1836 
  • வேதத்தை விளக்குவதையும், சிவனடியாரைப் பணிவதையும் தம் தொண்டாக அவர் கொண்டிருந்தார். \ 1837 
  • சிவனுக்கு 7 கால பூசனை செய்வதும், சிவனடியார்க்கு உணவு வழங்குவதும் அவரது பணியாக இருந்தது. \ 1838 
  • ஆதிரை நாளில் பூசனை செய்ய அவர் கோயிலுக்கு வந்தார். \ 1839 
  • பூசைக்கு வேண்டிய பொருள்களை அவரது மனைவியார் எடுத்துக்கொண்டு அவருடன் கோயிலுக்கு வந்தார். \ 1840 

பாடல்

1833  
பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும்
காய்த்த செந் நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச்
சாத்த மங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு     5.6.1

1834 
நன்மை சாலும் அப்பதி இடை நறு நுதல் மடவார்
மென் மலர்த் தடம் படிய மற்றவருடன் விரவி
அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம்
பன் மறைக் கிடையுடன் பயிற்றுவ பல பூவை     5.6.2

1835 
ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக் காப்பில்
ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இரு பிறப்பாளர்
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார்    5.6.3

1836 
சீலம் உய்த்த அத் திருமறையோர் செழு மூதூர்
ஞாலம் மிக்க நான் மறைப் பொருள் விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார்   5.6.4

1837 
வேத உள்ளுறை ஆவன விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவர் அடியாரையும் நயந்து
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார்    5.6.5

1838 
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை
நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா
எத் திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார்     5.6.6

1839 
ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் 5.6.7

1840 
உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்புற்ற
முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன
குறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூட
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லையில் தவத்தோர்    5.6.8

  • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.06. திரு நீல நக்க நாயனார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்




No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி