Saturday, 27 July 2019

பெரியபுராணம் - பெருமிழலைக் குறும்பர் – Perumizalai-Kurumbar


பெருமிழலைக் குறும்ப நாயனார் 
 • வளம் மிக்க மிழலை நாட்டில் பழமையான ஊர் பெருமிழலை. \ 1711 \ 5.3.1
 • இந்த ஊரின் தலைவர் மிழலைக் குறும்பனார். இவர் சிவனடியார்க்குத் தொண்டு செய்துவந்தார். \ 1712 \ 5.3.2
 • சிவனடியார்க்கு உணவளித்து, செலவமும் வழங்கிவந்தார். \ 1713 \ 5.3.3
 • திருத்தொண்டத் தொகை – நூலைப் பாடியவர் நம்பி ஆரூரர் (சுந்தர மூர்த்தி நாயனார்). இவரை வணங்கித் தொண்டு செய்யும் அடியாருள் தலைமையானவராக இவர் விளங்கினார். \ 1714 \ 5.3.4
 • சிவனடி சேர வழி நம்பியை வணங்குவதே என்று எண்ணித் தொண்டாற்றி  வந்தார். \ 1715 \ 5.3.5
 • நம்பி ஆரூரர் பெயரை வாழ்த்தியதன் பயனாக அணிமா முதலான எட்டு சித்திகளும் கைவரப் பெற்றார். அஞ்செழுத்தின் பொருளை உணர்ந்தார். \ 1716 \ 5.3.6
 • சிவன் ஓலை காட்டி ஆட்கொண்ட நம்பியைக் காணக் கொட்கோளூர் சென்றார். \ 1717 \ 5.3.7
 • திரு அஞ்சைக்களத்தில் சிவனைப் பாடி, சுந்தரர் வட கயிலை வரப்போவதை உணர்வால் தெரிந்துகொண்டார். \ 1718 \ 5.3.8
 • நாளை நம்பி கயிலை வருவார் என உணர்ந்தவர் அவரை அங்கு வரவேற்க, இன்றே கயிலை செல்ல வேண்டும் என்று விரும்பினார். \ 1719 \ 5.3.9
 • நான்கு கரணங்களையும் ஒருமித்து, பிரம நாடியில் செலுத்தி, தான் பெற்றிருந்த சித்தியால், கபாலத்தைத் திறந்து கயிலைக்கு நம்பி வருவதற்கு முன் சென்றார். \ 1720 \ 5.3.10
 • இப்படிச் சென்ற மிழலைக்குறும்பரை வணங்கி, காரைக்கால் அம்மை பெருமை கூறுகிறேன். \ 1721 \ 5.3.11

திருச்சிற்றம்பலம்
பாடல்

1711 
சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவும் பூகஞ் சூழ் புடைத்தாய்
வீதி தோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி
நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து
மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை    5.3.1

1712 
அன்ன தொன்மைத் திருப் பதிக் கண் அதிபர் மிழலைக் குறும்பனார்
சென்னி மதியம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய் பணிகள்
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார்  5.3.2

1713 
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக்
கொண்டு செல்ல இரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்த அடைவார்
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும்
புண்டரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார்  5.3.3

1714 
இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத் தொண்டின்
மெய்த் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார்
சித்தம் நிலவும் திருத் தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்து
நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத் தலை நின்றார்    5.3.4

1715 
மையார் தடங் கண் பரவையார் மணவாளன் தன் மலர்க் கழல்கள்
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்
செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாள் இணைக் கீழ்
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார்  5.3.5

1716 
நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதற்பின்
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார்    5.3.6

1717 
இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம்
பொன்னங் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து
மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர்
சென்னி மதி தோய் மாட மலி கொடுங் கோளூரைச் சேர்வுற்றார் 5.3.7

1718 
அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட அமுதைப் பரவி அணைவுறுவார்
செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வட கயிலைப் பொருப்பில் எய்த வரும் வாழ்வு
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார்  5.3.8

1719 
மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர்
நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து
கண்ணில் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று
எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் 5.3.9

1720 
நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு
காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப
மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார்   5.3.10

1721 
பயிலைச் செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுறக்
கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி
மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும்
குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்  5.3.11

திருச்சிற்றம்பலம்
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.03. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி