Saturday, 27 July 2019

பெரியபுராணம் \ காரைக்கால் அம்மையார் \ KaraikalAmmaiyar 1787


நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க வேண்டும்
  • “இறவாத உன் அன்பு வேண்டும். பிறவாமை வேண்டும். பிறப்பு உண்டேல் உன்னை மறவாமை வேண்டும். இன்னும் வேண்டும். அறவா! நீ மகிழ்வுடன் ஆடிம்போது உன் காலடியில் நான் இருக்க வேண்டும்” என்று வேண்டினார். \ 1781 \ 5.4.60
  • “தென்திசை ஆலங்காட்டில் இருந்துகொண்டு எம்மைப் பாடுக” – என்றார் சிவன். \ 1782 \ 5.4.61
  • தலையால் நடந்து ஆலங்காட்டின் உள்ளே நுழைந்தார். \ 1783 \ 5.4.62
  • “கொங்கை திரங்கி” என்று எடுத்து மூத்த திருப்பதிகம் பாடினார். \ 1784 \ 5.4.63
  • எட்டி இலவம் மீகை” – என்று எடுத்துத் திருப்பதிகம் பாடினார். \ 1785 \ 5.4.64
  • மடுத்த புனல் வேணியினார்” என்று பாடும்போது தாண்டவம் ஆடும்போது அவர் சேவடிக்கீழ் இருப்பதாகப் பாடினார். \ 1786 \ 5.4.65
  • இனி, திங்களூர் அப்பூதி அடிகள் தொண்டு பற்றிப் புகல்வேன். \ 1787 \ 5.4.66

திருச்சிற்றம்பலம்
பாடல்

1781 
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் 5.4.60

1782 
கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும்
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில்
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்
பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான் 5.4.61

1783 
அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேத
மெய்ப் பொருள் ஆனார் தம்மை விடை கொண்டு வணங்கிப் போந்து
செப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங்காடாம்
நற் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே 5.4.62

1784 
ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு
மூலம் காண்பரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடி
ஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில் 5.4.63

1785 
மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும்
இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி
எட்டி இலவம் மீகை என எடுத்துத் திருப் பதிகம்
கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார்    5.4.64

1786 
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி
கொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர்
எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா     5.4.65

1787 
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றிச்
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம்
போத மா முனிவர் செய்த திருத் தொண்டு புகலல் உற்றேன்   5.4.66

திருச்சிற்றம்பலம்
  • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.04. காரைக்கால் அம்மையார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி