Saturday, 27 July 2019

பெரியபுராணம் \ காரைக்கால் அம்மையார் \ KaraikalAmmaiyar 1780


பேய் உருவம்
 • புனிதவதி விரும்பியவாறு அவரது உடல் பேய் வடிவம் பெற்றது. அது தசையே இல்லாத எலும்பும் தோலுமாகத் தோன்றியது. \ 1771 \ 5.4.50
 • வானவர் மலர்மாரி பொழிந்தனர். சுற்றத்தார் அஞ்சித் தொழுது ஓடினர். \ 1772 \ 5.4.51
 • ஞானம் தோன்றி, புனிதவதி “அற்புதத் திரு அந்தாதி” பாடினார். \ 1773 \ 5.4.52
 • இரட்டைமணி மாலை – பாடினார். வழிபடுவதற்காக, கயிலாயம் வந்தார். \ 1774 \ 5.4.53
 • அவரது உருவத்தைக் கண்டவர்கள் அஞ்சி ஓடினர். \ 1775 \ 5.4.54
 • வடதிசை நாடுகளில் எல்லாம் திரிந்தார். கயிலை மலையில் கால் படாமல் தலையை ஊன்றி நடந்தார். \ 1776 \ 5.4.55
 • இப்படி ஏறுவதை உமை கண்ணுற்றாள். \ 1777 \ 5.4.56
 • எலும்பு உருவம் ஒன்று தலையினால் நடந்து ஏறுவது ஏன் – என்று சிவனை வினவினாள். \ 1778 \ 5.4.57
 • நம்மைப் பேணும் அம்மை. இந்த வடிவத்தை வேண்டிப் பெற்றாள்” என்றார், சிவன். \ 1779 \ 5.4.58
 • “அம்மையே அப்பனே அருள் செய்ய வேண்டும்” என்று வேண்டினாள், புனிதவதி. “என்ன வேண்டும்” என்று சிவன் வினவினார். \ 1780 \ 5.4.59

பாடல்

1771 
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்     5.4.50

1772 
மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற
தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்   5.4.51

1773 
உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை
அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார்
பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும்
நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி     5.4.52

1774 
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ண
வாய்ந்த பேர் அருள் முன் கூற வழி படும் வழியால் வந்தார்   5.4.53

1775 
கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள்
கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவாறு கூறக் கேட்டே
அண்ட நாயகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை
எண் திசை மக்களுக்கு யான் எவ்வுருவாய் என் என்பார்  5.4.54

1776 
வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று
தொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும்
படர் ஒளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின்
நடையினைத் தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார்   5.4.55

1777 
தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச்
சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்குற்றது அன்றே   5.4.56

1778 
அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து
தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும்
எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன
நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான்  5.4.57

1779 
வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்     5.4.58

1780 
அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று
பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்    5.4.59
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.04. காரைக்கால் அம்மையார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்
No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி