Saturday, 27 July 2019

பெரியபுராணம் \ காரைக்கால் அம்மையார் \ KaraikalAmmaiyar 1770


கணவன் மனைவியை வணங்கியது
 • கப்பலில் சென்ற பரமதத்தன் பெரும்பொருளுடன் மீண்டு பாண்டிநாட்டு நகர் ஒன்றில் இருக்கிறான் என்று புனிதவதியின் உறவினர்கள்  கேள்விப்பட்டனர். \ 1761 \ 5.4.40
 • புனிதவதியாரை அவனிடம் கொண்டுபோய் விடுவது என்று முடிவு செய்தனர். \ 1762 \ 5.4.41
 • புனிதவதியாரைப் பல்லக்கில் தூக்கிச் சென்றனர். \ 1763 \ 5.4.42
 • மனைவியை அழைத்து வந்திருக்கும் செய்தியைக் கணவருக்குச் சொல்லி அனுப்பினர். \ 1764 \ 5.4.43
 • செய்தி கேட்ட பரம தத்தன் தன் இரண்டாம் மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு ஓடோடி வந்தான். \ 1765    \ 5.4.44
 • வந்தவன் தன் மனைவி, மகள் ஆகியோருடன் முதல் மனைவி காலடிகளில் விழுந்து வணங்கினான். “உன் அருளால் வாழ்கிறேன். என் மகள் இவளுக்கு உன் பெயர் சூட்டியுள்ளேன்” என்றான். \ 1766 \ 5.4.45
 • மனைவியைக் கணவன் வணங்க, புனிதவதியும் கண்டவர்களும் அச்சத்தோடு ஒதுங்கி நின்றனர். “மனைவியை வணங்குவது ஏன்” என வினவினர். \ 1767 \ 5.4.46
 • இவர் மானுடர் அல்லர். தெய்வம் – என்றான். \ 1768 \ 5.4.47
 • கேட்டவர்கள் வியந்தனர். புனிதவதி சிவனைப் போற்றினார். \ 1769   \ 5.4.48
 • “என் கணவனுக்குப் பயன்படாத என் உடம்பால் எனக்கு என்ன பயன்? அடியேனுக்குப் பேய் வடிவம் தா” என்று வேண்டினார். \ 1770 \ 5.4.49

பாடல்

1761 
விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன்
வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி
அளவில் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று
கிளர் ஒளி மணிக் கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே     5.4.40

1762 
அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும்
தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர்
கொம்மை வெம் முலையினாளைக் கொண்டு போய் விடுவது என்றார்     5.4.41

1763 
மா மணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத்
தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும்
தே மொழியவரும் சூழச் சேண் இடைக் கழிந்து சென்றார் 5.4.42

1764 
சில பகல் கடந்து சென்று செம் தமிழ்த் திருநாடு எய்தி
மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து
குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை
தொலைவில் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார்   5.4.43

1765 
வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்த
பைந் தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடு
முந்துறச் செல்வேன் என்று மொய் குழல் அவர் பால் வந்தான் 5.4.44

1766 
தானும் அம் மனைவியோடும் தளிர் நடை மகவினோடும்
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும்
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்   5.4.45

1767 
கணவன் தான் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும்
அணைவுறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார்     5.4.46

1768 
மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்
நற் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு
பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான்   5.4.47

1769 
என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார்
மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக்
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் 5.4.48

1770 
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால்
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்     5.4.49
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.04. காரைக்கால் அம்மையார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி