Saturday, 27 July 2019

பெரியபுராணம் \ காரைக்கால் அம்மையார் \ KaraikalAmmaiyar 1760


இரண்டாவது மனைவி
 • கணவன் பரம தத்தன் தான் கொடுத்தனுப்பாத மூன்றாவது மாம்பழம் ஒன்றைத் தரும்படிக் கேட்க, புனிதவதி இறைவனை வேண்டினார். அவர் கையில் புதியதொரு மாம்பழம் வந்தது. அதனைக் கணவன் கையில் கொடுத்தார். \ 1751 \ 5.4.30
 • பரமதத்தன் கைக்கு வந்ததும் அது மறைந்தது. அதனால் கணவன் மனைவியைப் பேய் என்று கருதினான். பிரிந்து வாழலானான். \ 1752 \ 5.4.31
 • மனைவியைக் கைவிடக் கருதி, பொருள் ஈட்டி வருவதாகச் சொல்லி கப்பல் கட்டச் சொன்னான். \ 1753 \ 5.4.32
 • கம்மிர்கள் கட்டித் தந்தனர். பண்டங்களை ஏற்றிக்கொண்டு தலைமை நாய்கனாகச் சென்றான். \ 1754 \ 5.4.33
 • பெருஞ்செல்வம் ஈட்டிக்கொண்டு கன்னியாகுமரி இருக்கும் பாண்டிநாட்டுத் துறைமுகம் வந்து சேர்ந்தான். \ 1755 \ 5.4.34
 • அந்த ஊரில் சிறந்த வணிகன் மகள் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். \ 1756 \ 5.4.35
 • என்றாலும் புனிதவதியாரை மறக்க முடியாமல் இருந்தான். எனினும் இரண்டாம் மனைவியோடு இன்பமாக வாழ்ந்தான். \ 1757 \ 5.4.36
 • அவர்களுக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. \ 1758 \ 5.4.37
 • முதல் மனைவி புனிதவதியைத் தெய்வம் என்று எண்ணித் தன் மகளுக்குப் “புனிதவதி” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான். \ 1759 \ 5.4.38
 • முந்தைய மனைவி கற்பினோடு மனையறம் போற்றி வந்தார். \ 1760 \ 5.4.39

பாடல்

1751 
பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை
ஆங்கு அவன் கைக் கொடுதலுமே அதிசயித்து வாங்கினான்    5.4.30

1752 
வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும்
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில்     5.4.31

1753 
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான்
படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகி
நெடு நிதி கொணர்வேன் என்ன நிரந்த பல் கிளைஞர் ஆகும்
வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் 5.4.32

1754 
கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும்
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி
சலம் தரு கடவுள் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும்
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரைக் கடல் மேல் போனான்    5.4.33

1755 
கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில்
அடை உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப்
படர் புனல் கன்னி நாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்     5.4.34

1756 
அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான் 5.4.35

1757 
பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னை
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம்
புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையின் ஓடு
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில்    5.4.36

1758 
முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்
இரு நிதிக் கிழவன் எய்திய திருவின் மிக்குப்
பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான்     5.4.37

1759 
மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவியாரைத்
தொடர் அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு
கடன் அமைத்தவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்  5.4.38

1760 
இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும்
கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆன
தன் நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக   5.4.39
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.04. காரைக்கால் அம்மையார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி