Saturday, 27 July 2019

பெரியபுராணம் \ காரைக்கால் அம்மையார் \ KaraikalAmmaiyar 1750


சிவன் தந்த மாம்பழம்
 • கணவன் அனுப்பிவைத்த மாங்கனிகளில் ஒன்றைச் சிவனடியார்க்குப் புனிதவதி, உணவுடன் கறியமுதாக அளித்தார். \ 1741 \ 5.4.20
 • முதிர்ந்த அந்தச் சிவனடியார் அதனை உண்டு மகிழந்து சென்றுவிட்டார். \ 1742 \ 5.4.21
 • அவர் போன பின்னர் கணவர் வந்தார். \ 1743 \ 5.4.22
 • செய்த கறியமுதுடன் மீதமிருந்த மாம்பழத்தையும் கணவனுக்குப் படைத்தார். \ 1744 \ 5.4.23
 • மாங்கனியின் சுவையில் மயங்கிய கணவன் மற்றொரு மாங்கனியையும் தருமாறு கேட்டான். மனைவி கொண்டுவர உள்ளே சென்றார். \ 1745 \ 5.4.24
 • சிவனை நினைத்தார். அவர் கைக்கு மாம்பழம் ஒன்று வந்தது. \ 1746 \ 5.4.25
 • அதனைக் கணவனுக்கு அளித்தார். இதன் சுவை முன்பு உண்டதைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. எனவே, கணவன் “இதனை எங்குப் பெற்றாய்” என்று மனைவியை வினவினான். \ 1747 \ 5.4.26
 • மனைவி நடுங்கினாள். \ 1748 \ 5.4.27
 • உண்மையைக் கூறினார். \ 1749 \ 5.4.28
 • “உண்மை எனின் இன்னொரு பழம் தா” என்றான். \ 1750 \ 5.4.29

பாடல்

1741 
இல்லாளன் வைக்க எனத் தம் பக்கல் முன் இருந்த
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால்
அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார்   5.4.20

1742 
மூப்புறும் அத் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத்
தீப் பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத் தொண்டர்
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்திப்
பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார்     5.4.21

1743 
மற்றவர் தாம் போயின பின் மனைப் பதி ஆகிய வணிகன்
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப்
பொற்புற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக்
கற்புடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார்     5.4.22

1744 
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின்
மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல்
அன்ன மனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார்     5.4.23

1745 
மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன்
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார்   5.4.24

1746 
அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார்
மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான்
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்
கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று   5.4.25

1747 
மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்
உற்ற சுவை அமுதினும் மேல் பட உளதாயிட இது தான்
முன் தரு மாங் கனி அன்று மூவுலகில் பெறற்கு அரிதால்
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான்     5.4.26

1748 
அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும்
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார்
கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை
மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார்   5.4.27

1749 
செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார்
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு
மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்    5.4.28

1750 
ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான்
வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான்
தேசுடைய சடைப் பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர்
ஆசில் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் 5.4.29
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.04. காரைக்கால் அம்மையார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி