Saturday, 27 July 2019

பெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் – KaraikalAmmaiyar 1740


மாம்பழம்
 • திருமண நாள் குறிக்கப்பட்டது. திருமண அழைப்பு ஓலைகள் அனுப்பப்பட்டன. காரைக்காலில் மணமகள் இல்லத்தில் முரசு முழங்கிற்று. \ 1731 \ 5.4.10
 • அழகிய மாடத்த்தில் நூல் விதி வழி கலியாணம் நடைபெற்றது. \ 1732 \ 5.4.11
 • தனதத்தன் மணமக்கள் வாழ, தனி மாளிகை ஒன்று கட்டித் தந்தான். \ 1733 \ 5.4.12
 • நிதிபதியும் தன் மகன் வாழ நிறைந்த செல்வத்தை வழங்கினான். \ 1734 \ 5.4.13
 • புனிதவதி சிவத்தொண்டு செய்துகொண்டு அறநெறி வழாமல் குடும்பம் நடத்திவந்தார். \ 1735 \ 5.4.14
 • சிவனடியார்க்கு அமுது, அணிமணி, மற்றும் வேண்டுவன தந்து வாழ்ந்துவந்தார். \ 1736 \ 5.4.15
 • பரம தத்தனுக்கு ஒருவர் மாம்பழம் இரண்டு அளித்தார். அதனை அவன் தன் மனைவி புனிதவதியிடம் கொடுக்கச் சொன்னான். \ 1737 \ 5.4.16
 • புனிதவதி மாம்பழங்களை வாங்கி வைத்தார். அதன் பின் சிவனடியார் ஒருவர் பசியோடு புனிதவதி இல்லம் வந்தார். \ 1738 \ 5.4.17
 • புனிதவதி அவருக்கு விருந்தளிக்க விரும்பினார். \ 1739 \ 5.4.18
 • அவருக்கு அளிக்கக் கறியமுது இல்லை. \ 1740 \ 5.4.19

பாடல்

1731 
மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள்
அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம்அமைவித்தே
இணர்அலங்கல்மைந்தனையும்மண அணியின் எழில் விளக்கி
பணைமுரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார் 5.4.10

1732 
அளி மிடைஆர்த்ததனதத்தன் அணி மாடத்துள் புகுந்து
தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத்
தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க்காளைக்குக்
களி மகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள்     5.4.11

1733 
மங்கல மா மணவினைகள் முடித்து இயல்பின்வைகு நாள்
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால்தனதத்தன்
பொங்கொலி நீர் நாகையினில்போகாமே கணவன் உடன்
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் 5.4.12

1734 
மகள் கொடையின் மகிழ் சிறக்கும்வரம்பில் தனம் கொடுத்து அதன்பின்
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில்நிதிபதி தன் குல மகனும்
தகைப்பில் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி
மிகப் புரியும் கொள்கையினில்மேம் படுதல் மேவினான்  5.4.13

1735 
ஆங்கு அவன் தன் இல்வாழ்க்கை அரும் துணையாய்அமர்கின்ற
பூங்குழலார் அவர் தாமும் பொரு விடையார்திருவடிக் கீழ்
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப்
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில்பயில்வார்     5.4.14

1736 
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்
செம்பொன்னும் நவ மணியும்செழுந்துகிலும் முதலான
தம் பரிவினால்அவர்க்குத்தகுதியின்வேண்டுவகொடுத்தும்
உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகு நாள்   5.4.15

1737 
பாங்குடையநெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு
மாங்கனிகள்ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான்     5.4.16

1738 
கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு
மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதரார் வைத்து அதற்பின்
பண அரவம் புனைந்து அருளும்பரமனார்திருத் தொண்டர்
உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள்புகுந்தார்   5.4.17

1739 
வேதங்கள்மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு
நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என நண்ணிப்
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார்  5.4.18

1740 
கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட
வெறி மலர் மேல் திரு அனையார்விடையவன் தன் அடியாரே
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும்
அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார்    5.4.19
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.04. காரைக்கால் அம்மையார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி