Wednesday, 31 July 2019

பெரியபுராணம் \ திருஞானசம்பந்தர் \ GnanaSampantar1970


ஞானப்பால்
  • நீரில் மூழ்கிய தந்தையைக் காணாமல் பிள்ளையார் கண்ணீர் விட்டுக்க்கொண்டு அழுதார். 1961 
  • அப்போது திருத் தோணிபுர அம்மையப்பர் விடைமேல் எழுந்தருளினார். 1962    
  • ஞானம் கொடுக்க விரும்பினார். 1963   
  • “முலைப்பால் வள்ளத்தில் கறந்து ஊட்டுக” என்றார். 1964
  • அம்மை தன் முலைப்பாலை வள்ளத்தில் கறந்தார். 1965 
  • அதில் ஞானத்தைக் குழைத்து, பிள்ளையின் கண்ணீரைத் துடைத்து ஊட்டி அழுகையை நிறுத்தினார். 1966
  • அது முதல், அம்மையப்பரின் ஆளுடைய பிள்ளை ஆனார். சிவஞானம் உண்ட சம்பந்தர் ஆனார். 1967    
  • சிவனடியை மட்டுமே சிந்திப்பது சிவஞானம். அதுவே மெய்ஞ்ஞானம். 1968
  • எப்பொருளையும் ஆக்குபவன் சிவன் – என்னும் உணர்வு. அப்பொருள் அடியார்கள் – என்னும் அறிவு ஆகியவையே சிவஞானம். 1969   
  • நியமங்கள் முடித்து, கரையேறிய சிவபாத இருதயர் “யார் தந்த பால் உண்டாய்” எனக் கேட்டு வெகுண்டார். 1970   

பாடல்

1961 
மெய்ம் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார்
தம் மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை தானோ
செம் மேனி வெண் நீற்றார் திருத் தோணி சிகரம் பார்த்து
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள   6.1.63

1962 
அந் நிலையில் திருத் தோணி வீற்றிருந்தார் அருள் நோக்கால்
முன் நிலைமைத் திருத் தொண்டு முன்னி அவர்க்கு அருள் புரிவான்
பொன் மலை வல்லியும் தாமும் பொருவிடை மேல் எழுந்து அருளிச்    
சென்னி இளம் பிறை திகழச் செழும் பொய்கை மருங்கு அணைந்தார் 6.1.64

1963 
திரு மறை நூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த 
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும்
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த
அருமறையாள் உடையவளை அளித்து அருள அருள் செய்வார் 6.1.65

1964 
அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள் கருணை
எழுகின்ற திரு உள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும்
தொழுகின்ற மலைக்கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள்
பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன 6.1.66

1965 
ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம் பெருகு கருணைத் திரு வடிவான
சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து  
வார் இணங்கு திரு முலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி    6.1.67

1966 
எண்ணரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர் நோக்கும்
கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்து
அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள் புரிந்தார்     6.1.68

1967 
யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார்
ஆவதனால்ஆளுடைய பிள்ளையாராய் அகில
தேவருக்கும் முனிவர்க்கும் தெரிவு அரிய பொருளாகும்
தாவில் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார் 6.1.69

1968 
சிவன் அடியே சிந்திக்கும் திருப் பெருகு சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம்
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்  6.1.70

1969 
எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும்
அப்பொருள் தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும்   
இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும்
துப்புரவு இல்லார் துணிவு துகளாகச் சூழ்ந்து எழுந்தார்    6.1.71

1970 
சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு பொழுதில்
நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி
பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார் தமை நோக்கி
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா     6.1.72
சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 6.01. திருஞானசம்பந்தசுவாமிகள் புராணம் - முதல் பகுதி- 12 ஆம் நூற்றாண்டு நூல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி