Wednesday, 31 July 2019

பெரியபுராணம் \ திருஞானசம்பந்தர் \ GnanaSampantar1960


பிள்ளையார் அழத் தொடங்கினார்
  • பிள்ளையார் 3 ஆண்டுப் பிள்ளை. 1951  
  • உலகு உய்யப் பிள்ளையாருக்கு நிகழ்ந்தது சொல்கிறேன். 1952 
  • பிறர் வழிபாடு செய்யும்போது இவர் வேறொரு குறிப்புடன் அழுவது வழக்கம். 1953   
  • ஒருநாள் தந்தை நீராடச் சென்றபோது, அடம் பிடித்து, பிள்ளையார் அவருடன் சென்றார். 1954 
  • தந்தையின் முன்னும் பின்னும் ஏமாற்றிக்கொண்டு கிண்கிணி ஒலிப்பச் சென்றார். 1955
  • தோணிபுரத் தடத் துறைக்குச் சென்றனர். 1956
  • தோணிபுர இறைவனை வணங்கி, பிள்ளையாரைக் கரையில் விட்டுவிட்டு, குளத்துக்குள் இறங்கித் தந்தை நீராடினார். 1957 
  • தருப் பிடித்து, நியமங்கள் செய்து, நீருக்குள் மூழ்கினார். 1958  
  • தந்தையைக் காணாமல் பிள்ளையார் அழத் தொடங்கினார். 1959
  • கண்களைக் கைகளால் பிசைந்துகொண்டு பொருமி அழுதார். 1960    

பாடல்

1951 
மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்று இருந்த
திங்கள் சேர் சடையார் தம் திரு அருட்குச் செய் தவத்தின்
அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு மறையோடு உலகு உய்ய
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும்     6.1.53

1952 
நாவாண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்பப்
பூவாண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த
சேவாண்ட கொடியவர் தம் சிரபுரத்துச் சிறுவருக்கு
மூவாண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் 6.1.54

1953 
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்
மண்டு தவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருளத்
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால்
கொண்டு எழலும் வெருக் கொண்டாற் போல் அழுவார் குறிப்பு அயலாய்   6.1.55

1954 
மேதகைய இந் நாளில் வேறு ஒரு நாள் வேத விதி
நீதி முறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீர் ஆடத்
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச் 
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் 6.1.56

1955 
பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந் தவத்தோர்
முன் செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும்
மின் செய் பொலங் கிண்கிணிக் கால் கொட்டி அவர் மீளாமை 
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார்  6.1.57

1956 
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல்
இடை அறாப் பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பு இடமாய்
விடை உயர்த்தார் திருத்தோணிப் பற்று விடா மேன்மை அதாம்    
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் 6.1.58

1957 
பிள்ளையார் தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித்
தெள்ளு நீர்ப் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை எதிர் வணங்கி மணி வாவி
உள்ளிழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மகப்பெற்றார்    6.1.59

1958 
நீர் ஆடித் தருப் பிடித்து நியமங்கள் பல செய்வார்
நீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன்பின்
ஆராத விருப்பினால் அகம் அமர் உடம்படிய நீர்
பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய்     6.1.60

1959 
மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மைக் காணாது
இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல்
முறை புரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங்கினார்
நிறை புனல் வாவிக் கரையில் நின்று அருளும் பிள்ளையார்   6.1.61

1960 
கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து
வண்ண மலர்ச் செங்கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப    
எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப
புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுது அருளினார்     6.1.62
சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 6.01. திருஞானசம்பந்தசுவாமிகள் புராணம் - முதல் பகுதி- 12 ஆம் நூற்றாண்டு நூல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி