Wednesday, 31 July 2019

பெரியபுராணம் \ திருஞானசம்பந்தர் \ GnanaSampantar1950


விளையாட்டு 
  • ஞானசம்பந்தப் பிள்ளையார்க்குத் திருநீறு ஒன்றை மட்டுமே காப்பாக அணிவித்தனர். 1941    
  • தாய் மடி, தவிசு, தொட்டில்  ஆகியவற்றில் அவருக்குத் தாலாட்டு. 1942   
  • புகலிப் பிள்ளையாருக்கு முடியிறக்கினர். அவர் வாயில் செங்கீரை ஆடினார். 1943
  • பர சமயம் அறியோம் என்று கைகளால் சப்பாணி கொட்டினார். 1944 
  • முற்றத்தில் தவழ்ந்தார். 1945
  • கவுணியர் கற்பகமே வருக வருக என்று தோகையரும், தாதியரும் அழைத்தனர். 1946 
  • பிள்ளையார் சிரித்து விளையாடினார். 1947   
  • கீழ்மைச் சமயங்கள் அறத் தளர் நடை போட்டார். 1948   
  • ஓராண்டில் தாதியர் கைகளைப் பற்றிக்கொண்டு விளையாடினார். 1949
  • சிறுதேர் உருட்டினார். சிற்றில் சிதைத்தார். 1950    

பாடல்

1941 
ஆறுலவு செய்ய சடை ஐயர் அருளாலே
பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு  
வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார்
நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்   6.1.43

1942 
தாயர் திரு மடித் தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும்
தூய சுடர்த் தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும்
சேய பொருள் திருமறையும் தீம் தமிழும் சிறக்க வரு
நாயகனைத் தாலாட்டும் நலம் பல பாராட்டினார்    6.1.44

1943 
வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார்
அருமறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்துப்
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல்
திருமுக மண்டலம் அசையச் செங்கீரை ஆடினார்   6.1.45

1944 
நாம் அறியோம் பர சமயம் உலகிர் எதிர் நாடாது
போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன் பால்
காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல்
தாமரைச் செங் கைகளினால் சப்பாணி கொட்டினார் 6.1.46

1945 
விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து
கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார்
மதி தவழ் மாளிகை முன்றின் மருங்கு தவழ்ந்து அருளினார்   6.1.47

1946 
சூழ வரும் பெருஞ்சுற்றத்துத் தோகையரும் தாதியரும்
காழியர் தம் சீராட்டே கவுணியர் கற்பகமே என்று  
ஏழ் இசையும் எவ் உலகும் தனித் தனியே
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப   6.1.48

1947 
திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும்
வருமகிழ்வு தலை சிறப்ப மற்றவர் மேல் செலவுகைத்தும்
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன்
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலிப் பிள்ளையார்  6.1.49

1948 
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டு
உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலையச் செந்நின்று
கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள்
தளர் நடை இட்டு அறத் தாமும் தளர் நடை இட்டு அருளினார் 6.1.50

1949 
தாதியர் தம் கைப்பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்து    
சோதி அணி மணிச் சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்த
பாத மலர் நிலம் பொருந்தப் பருவ முறை ஆண்டு ஒன்றின்
மீது அணைய நடந்து அருளி விளையாடத் தொடங்கினார் 6.1.51

1950 
சிறு மணித் தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழை
நறுநுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும்
குறு வியர்ப்புத் துளி அரும்பக் கொழும் பொடி ஆடிய கோல
மறுகு இடைப் பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார்     6.1.52
சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 6.01. திருஞானசம்பந்தசுவாமிகள் புராணம் - முதல் பகுதி- 12 ஆம் நூற்றாண்டு நூல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி