Tuesday, 30 July 2019

பெரியபுராணம் \ திருஞானசம்பந்தர் \ GnanaSampantar1940


பிறந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டம் 
  • பிள்ளையார் பிறந்தார் என்று சண்பை நகர் தெருக்களில் சங்கு, படகம், தாரை முதலான இசைக்கருவிகள் முழக்கினர். 1931
  • தந்தையும் தன் முற்றத்தை அணி செய்தார். 1932  
  • சாதக முறைப்படிச் சடங்கு செய்தார். 1933   
  • மகளிரும் இல்லத்தில் விளக்கு வைத்து அணி செய்தனர். 1934
  • மணப்பொடி, முளைப்பாலி, நிறைகுடம் – திண்ணையில் வைத்தனர். 1935
  • பொன்னைத் தானமாக வழங்கினர். அடியார் அமுது உண்ணச் செய்தனர். மாலைகளைத் தொங்க விட்டனர். 1936    
  • ஐயவி, அகில், ஆகுதி – புகைமணம் கமழச் செய்தனர். 1937    
  • 10 நாள் இவ்வாறு கொண்டாடினர். 1938 
  • பெயர் சூட்டத் தொட்டிலில் இட்டனர். 1939   
  • உமை பாலூட்டும் முன்பே தாய் அன்பைக் குழைத்து ஊட்டினாள். 1940    

பாடல்

1931 
அம் கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச்
சங்கம் படகம் கருவி தாரை முதலான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம்     6.1.33

1932 
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத்
தரும் குலமறைத் தலைவர் தம் பவன முன்றில்
பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே
அரும் திரு மகப் பெற அணைந்த அணி செய்வார்  6.1.34

1933 
காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார்
மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார்
சூத நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச்
சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார்  6.1.35

1934 
மா மறை விழுக் குல மடந்தையர்கள் தம்மில்
தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்னத்
தூ மணி விளக்கொடு சுடர்க் குழைகள் மின்னக்
காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார்     6.1.36

1935 
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி
உண்ணிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார்
வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார்
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார்    6.1.37

1936 
செம் பொன் முதலான பல தான வினை செய்வார்
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார்
வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர்
நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார்  6.1.38

1937 
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும்
நெய் அகில் நறுங் குறை நிறைத்த புகையாலும்
வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையினாலும் 
தெய்வ மணம் நாறவரு செய் தொழில் விளைப்பார் 6.1.39

1938 
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர்
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின்
மேய விதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்  6.1.40

1939 
நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச்
சேம உதயப் பரிதியில் திகழ் பிரானைத்
தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத்
தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார்   6.1.41

1940 
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால்
அரு மறை குழைத்த அமுது செய்து அருளுவாரைத்
தரும் இறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே
திருமுலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார்   6.1.42
சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 6.01. திருஞானசம்பந்தசுவாமிகள் புராணம் - முதல் பகுதி- 12 ஆம் நூற்றாண்டு நூல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி