Monday, 29 July 2019

பெரியபுராணம் \ அப்பூதி அடிகள் \ Apputhi Adigal \ 1832


விடம் இறங்கியது 
 • நாவுக்கரசு வற்புறுத்திக் கேட்க, அப்பூதி அடிகள் மகனை விடம் தீண்டிய உண்மையை ஒளிக்காமல் கூறினார். \ 1821 
 • மகன் உடலைக் கண்டு நாவுக்கரசர் பதிகம் பாடினார். விடம் இறங்கியது. \ 1822 
 • மகன் உறக்கம் நீங்கி எழுவது போல் எழுந்தான். அப்பூதி அடிகள் நாவுக்கரசை வணங்கினார். நாவுக்கரசர் அவருக்குத் திருநீறு அளித்தார். \ 1823 
 • நாவுக்கரசர் அமுது செய்ய மகன் சிறிது இடையூறு செய்தான் என்று அப்பூதி அடிகள் மனம் நொந்தார். \ 1824 
 • நாவுக்கரசர் அமுது செய்யத் தகுவன செய்தார், அப்பூதி அடிகள். \ 1825 
 • கோமயத்தால் பூமியை மெழுகினர். விளக்கு ஏற்றி வைத்தனர். வாழை இலையின் அறுத்த பக்கம் உண்போரின் வலப்புறம் இருக்குமாறு மரபுப்படி விரித்தனர். \ 1826 
 • கைகளைக் கழுவ நல்ல நீர் ஊற்றினர். அமுது செய்யுமாறு வேண்டினர். \ 1827 
 • அப்பூதி அடிகளாரின் மைந்தனை அருகில் அமர்த்திக்கொண்டு நாவுக்கரசர் அமுது செய்தார். \ 1828 
 • நாவுக்கரசு அவர் இல்லத்தில் பல நாள் தங்கினார். திருப்பழனம் மீண்டு பதிகம் பாடினார். \ 1829 
 • அங்கு அப்பூதி அடிகளாரைச் சிறப்பித்துச் சொல்மாலை பாடினார். \ 1830 
 • பின்னர் நாவுக்கரசு தில்லை வந்தார். \ 1831 
 • இனி, சாத்தமங்கை நீலநக்கர் சிறப்பினை நவில்வேன். \ 1832  


திருச்சிற்றம்பலம்
பாடல்

1821 
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ
வருவது என்று உரையார் ஏனும் மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே 5.5.34

1822 
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம்
யாவர் இத் தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே
ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம்
பா இசைப் பதிகம் பாடிப் பணி விடம் பாற்று வித்தார் 5.5.35

1823 
தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானைப் போன்று
சே உகைத்தவர் ஆட் கொண்ட திருநாவுக்கரசர் செய்ய
பூவடி வணங்கக் கண்டு புனித நீறு அளித்தார் அன்றே 5.5.36

1824 
பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின்
நெறியினைப் போற்றி வாழ்ந்தார் நின்ற அப் பயந்தார் தாங்கள்
அறிவரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்குச்
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் 5.5.37

1825 
ஆங்கவர் வாட்டம் தன்னை அறிந்து சொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடும் தகுவன சமைத்துச் சார்வார்    5.5.38

1826 
புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித்
திகழ்ந்த வான் சுதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றி
நிகழ்ந்த அக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம் பெற மரபின் வைத்தார்    5.5.39

1827 
திருந்திய வாச நல் நீர் அளித்திட திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப் பிள்ளைகள் உடனே நோக்கி
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார்   5.5.40

1828 
மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து அமுது செய்யச்
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்கக்
கொந்து அவிழ் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும்
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே   5.5.41

1829 
மா தவ மறையோர் செல்வ மனை இடை அமுது செய்து
காதல் நண்பு அளித்துப் பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர்
நாதர் தம் பாதம் சேர்ந்து நல் தமிழ்ப் பதிகம் செய்வார்     5.5.42

1830 
அப்பூதி அடிகளார் தம் அடிமையைச் சிறப்பித்து ஆன்ற
மெய்ப் பூதி அணிந்தார் தம்மை விரும்பு சொல் மாலை வேய்ந்த
இப் பூதி பெற்ற நல்லோர் எல்லை இல் அன்பால் என்றும்
செப்பு ஊதியம் கைக் கொண்டார் திருநாவுக்கரசர் பாதம்    5.5.43

1831 
இவ் வகை அரசின் நாமம் ஏத்தி எப் பொருளும் நாளும்
அவ்வரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும்
செவ்விய நெறியது ஆகத் திருத் தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே 5.5.44

1832 
மான் மறிக் கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றிப்
கான் மலர்க் கமல வாவிக் கழனி சூழ் சாத்த மங்கை
நான் மறை நீல நக்கர் திருத் தொழில் நவிலல் உற்றேன்  5.5.45

திருச்சிற்றம்பலம்

சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.05. அப்பூதி அடிகள் நாயனார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்
No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி