Monday, 29 July 2019

பெரியபுராணம் \ அப்பூதி அடிகள் \ Apputhi Adigal \ 1820


நாகம் தீண்டியது
 • பேறு பெற்றேன் - என்று எண்ணிக்கொண்டு மகன் மூத்த திருநாவுக்கரசு இலை கொண்டுவரச் சென்றான். வாழைக் குருத்தை அறுக்கும்போது நாகம் ஒன்று அவன் கைகளைச் சுற்றிக்கொண்டு கடித்துவிட்டது. 1811 
 • கையில் சுற்றிய நாகத்தை உதறி எறிந்துவிட்டு விடம் தலைக்கு ஏறாமுன்னர் ஓடிவந்தான். \ 1812 
 • நாவுக்கரசு அமுது செய்யத் தடை நேருமே என்று நிகழ்ந்ததை மறைக்க மகன் விரும்பினான். \ 1813 
 • இலைக் குருத்ததைத் தாயிடம் கொடுத்ததும், விடம் தலைக்கேறி, வாய் குழறி, மேனி கருகி, மயங்கி விழுந்தான். \ 1814 
 • தாய் தந்தையர் உளம் பதைத்தனர். கருகிய மேனி கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று உணர்ந்துகொண்டனர். பதற்றம் இல்லாமல் தொண்டருக்கு அமுது ஊட்ட ஆவன செய்தனர். \ 1815 
 • மகனைப் பாயில் சுருட்டிப் புழக்கடையில் வைத்தனர். \ 1816 
 • தொண்டரைப் பணிந்து "அமுது செய்து எம் குடி முழுதும் உய்யக் கொள்ள வேண்டும்" என்று வேண்டினர். \ 1817 
 • நாவுக்கரசை அழைத்துவந்து வேறு இருக்கையில் இருக்கும்படிச் செய்தனர். நாவுக்கரசர் இருவர்க்கும் திருநீறு அளித்தார். மகனுக்கும் அளிக்க அவனை அழைத்தார். \ 1818 
 • இப்போது இங்கு அவன் உதவான் - என்று அப்பூதி அடிகள் கூறினார். \ 1819 
 • அவரது கூற்றில் தடுமாற்றம் கண்டு, நாவுக்கரசு அஞ்சினார். \ 1820 
பாடல்

1811 
நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன் என்று
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்குப் பெரிய வாழை
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று
அல்லல் உற்று அழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற்று அன்றே  5.5.24

1812 
கையினில் கவர்ந்து சுற்றிக் கண் எரி காந்துகின்ற
பை அரா உதறி வீழ்த்துப் பதைப்பு உடன் பாந்தாள் பற்றும்
வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்திக்
கொய்த இக் குருத்தைச் சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் 5.5.25

1813 
பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த
வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும்
அரும் தவர் அமுது செய்யத் தாழ்க்க யான் அறையேன் என்று
திருந்திய கருத்தினோடும் செழுமனை சென்று புக்கான்    5.5.26

1814 
எரிவிடம் முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்து
விரியுரை குழறி ஆவி விடக் கொண்டு மயங்கி வீழ்வான்
பரி கலக் குருத்தைத் தாயார் பால் வைத்துப் படி மேல் வீழ்ந்தான் 5.5.27

1815 
தளர்ந்து வீழ் மகனைக் கண்டு தாயரும் தந்தை யாரும்
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று
துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார்   5.5.28

1816 
பெறல் அரும் புதல்வன் தன்னைப் பாயினுள் பெய்து மூடிப்
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று
விறல் உடைத் தொண்டனார் பால் விருப்பொடு விரைந்து வந்தார் 5.5.29

1817 
கடிது வந்து அமுது செய்யக் காலம் தாழ்கின்றது என்றே
அடிசிலும் கறியும் எல்லாம் அழகு உற அணைய வைத்துப்
படியில் சீர்த் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம்
குடி முழுதும் உய்யக் கொள்வீர் என்று அவர் கூறக் கேட்டு 5.5.30

1818 
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர்
திருந்தும் ஆசனத்தில் ஏறிப் பரிகலம் திருத்தும் முன்னர்
இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும்
பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில் 5.5.31

1819 
ஆதி நான்மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார்    5.5.32

1820 
அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திரு உள்ளத்து ஓர் தடு மாற்றம் சேர நோக்கி
இவ் உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால்
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்பு உற்று அஞ்சி    5.5.33

 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.05. அப்பூதி அடிகள் நாயனார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி