Sunday, 28 July 2019

பெரியபுராணம் \ அப்பூதி அடிகள் \ Apputhi Adigal \ 1800


திருநாவுகரசு - பெயர் 
  • நாவுக்கரசரைக் காணாமலேயே அவர்மீது அன்பு கொண்டவராக அப்பூதி அடிகள் விளங்கினார். \ 1788 \  5.5.1
  • களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் இல்லாதவராகத் திகழ்ந்தார். இல்லறம் பேணும் இவர் தம் வீட்டிலுள்ள அளவைகள் நிறைகோல் மக்கள் ஆ வொடு மேதி மற்றும் உள எல்லாவற்றிற்கும் “திருநாவுக்கரசு” என்று பெயரிட்டு அழைத்து மகிழ்ந்தார். \ 1789 \ 5.5.2
  • “திருநாவுக்கரசு” பெயரால் மடங்கள், தண்ணீர்ப் பந்தல் முதலானவையும் நிறுவியிருந்தார். \ 1790 \ 5.5.3
  • திருப்பழனம் வழிபட்ட நாவுக்கரசர் திங்களூரை வழிபட வந்தார். \ 1791 \ 5.5.4
  • வழிப்போக்கர்கள் கோடையில் இளைப்பாற அமைக்கப்பட்டிருந்த நீர் நிறைந்த குளமும், தண்ணீர்ப் பந்தலும் கண்டு அங்குத் தங்கினார். \ 1792     \ 5.5.5
  • ஆங்காங்கே இருந்த தண்ணீர்ப் பந்தல்களில் “திருநாவுக்கரசு” என்னும் பேர் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தார். \ 1793 \ 5.5.6
  • இந்தப் பந்தலுக்கு இப் பெயர் இட்டு அமைத்தவர் யார் – என வினவினார். இங்குள்ள சாலை, குளம், பூங்கா முதலானவற்றிற்கு எல்லாம் “திருநாவுக்கரசு” பெயர் சூட்டி அமைத்தவர் அப்பூதி அடிகள் என்றனர். \ 1794 \ 5.5.7
  • அவர் எங்கு உள்ளார் – என்று வினவ அவர் மனை அண்மையில் உள்ளது என்று காட்டினர். \ 1795 \ 5.5.8
  • அப்பூதி அடிகளார் வீட்டு வாயிலை அடைந்தார். \ 1796 \ 5.5.9
  • சிவனடியார் ஒருவர் வந்திருப்பதை அப்பூதி அடிகளுக்குத் தெரிவித்தனர். வெளியில் வந்த அந்தணர் அப்பூதி அடிகள் கருணை புரியும் வடிவுடையீர் எம் மனைக்கு வந்தது எம் பேறு என்றார். \ 1797 \ 5.5.10
  • திருப்பழனம் இறைஞ்சி வருகின்றேன். தண்ணீர்ப் பந்தல் முதலான பலவும் கண்டு இங்கு வந்தேன் – என்றார். \ 1798 \ 5.5.11
  • தண்ணீர்ப் பந்தரில் நும் பேர் எழுதாமல் வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்ன என வினவினார். \ 1799 \ 5.5.12
  • அமணர் பாதகத்தை வென்றவர் பெயரோ வேறு ஒருவர் பெயர் – எனக் கேட்டு அப்பூதி அடிகள் சினம் கொண்டார். \ 1800 \ 5.5.13

பாடல்

1788 
தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர்
ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார்
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்தவர் அறியா முன்னே
காண் தகு காதல் கூரக் கலந்த அன்பினராய் உள்ளார்     5.5.1

1789 
களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார்
வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப் பால் உள்ள
அளவைகள் நிறைகோல் மக்கள் ஆ வொடு மேதி மற்றும்
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ் வொழுகல் ஆற்றார்  5.5.2

1790 
வடிவு தாம் காணார் ஆயும் மன்னு சீர் வாக்கின் வேந்தர்
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டு அவர் நாமத்தால்
படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ள
முடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் 5.5.3

1791 
பொருப்பரையன் மடப் பிடியின் உடன் புணரும் சிவக்களிற்றின்
திருப் பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கு அரசர்
ஒருப் படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும்
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் 5.5.4

1792 
அளவில் சனம் செலவு ஒழியா வழிக் கரையில் அருள் உடையார்
உளம் அனைய தண் அளித்தாய் உறு வேனில் பரிவு அகற்றிக்
குளம் நிறைந்த நீர்த் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய்
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர்ப் பந்தர் வந்து அணைந்தார் 5.5.5

1793 
வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப்
பந்தர் உடன் அமுதமாம் தண்ணீரும் பார்த்து அருளிச்
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர்
சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார்    5.5.6

1794 
இப் பந்தர் இப் பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு
அப் பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால்
செப்பருஞ் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார்
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் 5.5.7

1795 
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று
நின்ற வரை நோக்கி அவர் எவ் டத்தார் என வினவத்
துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண்
சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார்    5.5.8

1796 
அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதி அடிகளார்
தங்கும் மனைக் கடைத் தலை முன் சார்வாக உள் இருந்த
திங்களூர் மறைத் தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார்
நங்கள் பிரான் தமர் ஒருவர் எனக் கேட்டு நண்ணினார்   5.5.9

1797 
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர் தம்
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார்
முடிவில் தவம் செய்தேன் கொல் முன்பு ஒழியும் கருணை புரி
வடிவுடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார்   5.5.10

1798 
ஒரு குன்ற வில்லாரைத் திருப் பழனத்துள் இறைஞ்சி
வருகின்றோம் வழிக் கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம்
தருகின்ற நிழல் தண்ணீர்ப் பந்தரும் கண்ட அத் தகைமை
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் எனப் புகல்வார் 5.5.11

1799 
ஆறணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த
ஈறில் தண்ணீர்ப் பந்தரில் நும் பேர் எழுதாதே
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என் கொல்
கூறும் என எதிர் மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார்  5.5.12

1800 
நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய்
நன்று அருளிச் செய்து இலீர் நாணில் அமண் பதகர் உடன்
ஒன்றிய மன்னவன் சூட்சி திருத் தொண்டின் உறைப் பாலே
வென்றவர் தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார்  5.5.13
  • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.05. அப்பூதி அடிகள் நாயனார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி