Sunday, 31 March 2019

கம்பராமாயணம் 194 KambaRamayanam 194

"என் தலைவன் வில்லை ஒடித்தான்" என்னும் களிப்பில் கூந்தலும் மேகலையும் பறக்குமாறு மகளிர் ஓடினர். 41 

குடையையும் குண்டிகையையும் தூக்கிக்கொண்டு, குந்துநடை போட்டவாறு அந்தணர் சென்றனர். அவர்கள் யானையையும் மகளிரையும் கண்டு அஞ்சியவாறு சென்றனர். 42 

தேரில் சென்ற மகளிர் தன் தேரில் ஏறிக்கொள்ளுமாறு சோர்ந்தவருக்குக் கை கொடுத்தனர். 43 

தேர், யானை, குதிரை செல்லும் ஒலியும், முரசொலியும் கேட்பதால் பிறர் சொல்வதைக் கேட்க முடியாத ஊமையர் போல் மக்கள் சென்றனர். 44 

சிலந்தி வலை போன்ற ஆடை உடுத்திக்கொண்டு சில மகளிர் சென்றனர். 45 

பாடல் 

தந்த வார்குழல் சோர்பவை தாங்கலார்,
சிந்து மேகலை சிந்தையும் செய்கலார்,
'எந்தை வில் இறுத்தான்' எனும் இன் சொலை
மைந்தர் பேச, மனம் களித்து ஓடுவார்.           41

குடையர், குண்டிகை தூக்கினர், குந்திய
நடையர், நாசி புதைத்த கை நாற்றலர்,-
கட களிற்றையும் காரிகையாரையும்
அடைய அஞ்சிய, அந்தணர்-முந்தினார்.        42

நாறு பூங் குழல் நங்கையர் கண்ணின் நீர்
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட,
'மாறு கொண்டனை வந்தனை ஆகில், வந்து
ஏறு தேர்' எனக் கைகள் இழிச்சுவார்.  43

குரைத்த தேரும், களிறும் குதிரையும்,
நிரைத்த வார் முரசும், நெளிந்து எங்கணும்
இரைத்த பேர் ஒலியால், இடை, யாவரும்
உரைத்த உணர்ந்திலர்; ஊமரின் ஏகினார். 44

நுண் சிலம்பி வலந்தன நுண் துகில்,
கள் சிலம்பு கருங் குழலார் குழ
உள் சிலம்பு சிலம்ப ஒதுங்கலால்,
உள் சிலம்பிடு பொய்கையும் போன்றதே.   45

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம்  14. எழுச்சிப் படலம்
கம்பன் தமிழ் வளம் - கதை 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி