Thursday, 5 April 2018

தமிழ்ப் பாவுக்கு மனைவி தாலி பரிசு Kongu-mandala-sathagam 66

சங்கரி துருக்கம் (துவரை) கோட்டை 


கொங்கு மண்டல சதகம் 66

சம்பந்த சர்க்கரை சங்ககிரி துருக்கம் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
பாளையக்காரர்கள் அரசுக்கு இறைவரி செலுத்த வேண்டும்.
சம்பந்த சர்க்கரை செலுத்தவில்லை.
அதனால் சிறை.
சிறையிலிட்டவர் மதுரை தளவாய் ராமப்பையர்.

அக்காலத்தில் தமிழ்ப்புலவர் ஒருவர் சர்க்கரையாரைக் காண ஆணூர் சென்றார்.
சர்க்கரையார் சிறையில் இருப்பதை அறிந்தார்.
சிறைச்சாலைக்குச் சென்றார்.
பரிசில் பெறும் இடம் இது அன்று என்று சொல்லிச் சிறைக்காவலர்கள் தடுத்தனர்.
பாடல் ஒன்றைப் பாடினார்.

எவரை என்று நாம் அறிவோம் இரப்பவனோ இடம் அறியான் இரவில் வானம்
கவரும் மதி ஒருபுறத்தே நிலவு எரிக்கும் பான்மை தனைக் கண்டிலீரோ
அவரை பதம் ஆகும் முனம் கடுகு பொடியாகிவிடும் அதனை ஓர்ந்து
துவரை முதல் காதலனாம் சம்பந்தச் சர்க்கரையார் சொல்லுவீரே.   (மேற்கோள் பாடல்)

துவரை = சங்ககிரி துர்க்கம்.

இந்தப் பாடலைக் கேட்ட சிறைக் காவலர்கள் சர்க்கரையாரைக் காண ஒப்புதல் அளித்தனர்.
புலவர் சர்க்கரையாரைக் கண்டார்.
சர்க்கரையார் தமிழ்வாணரைக் கட்டித் தழுவிக்கொண்டார்.
“காவலில் இருக்கும் என்னைக் காணப் பெரிதும் சிறுமைப்பட்டிருப்பீர்களே
பரிசில் கொடுக்க என் கையில் பணம் இல்லையே”
என்று சொல்லி வருந்தினார்.

நிலைமையை நண்பர் மூலமாக மனைவிக்குச் சொல்லி அனுப்பினார்.
கணவனுக்கு உதவும் மனைவி தன் தாலியைக் கொடுத்து அனுப்பினார்.
அதனை வாங்கிச் சர்க்கரையார் புலவர்க்குக் கொடுத்தார்.

கொங்கினில் ராமப் பயன் அதிகாரக் குரூரத்தினால்
கங்குல் இராப்பகல் சர்வ சங்காரம் செய் காலத்திலே
சிங்க நல் சம்பந்த சர்க்கரை தேவி திருக்கழுத்தின்
மங்கலியம் தனைத் தந்தான் தமிழ்க் கவிவாணருக்கே. (மேற்கோள் பாடல்)

மகிழ்வுடன் அதனை ஏற்றுக்கொண்ட புலவர் அதனைத் தளவாய் ராமப்பையரிடம் காட்டி மேலே உள்ள பாடலைப் பாடினார்.
தளவாய் வியப்புற்றார்.
சர்க்கரையாரை அழைத்துவரச் சொன்னார்.
சர்க்கரையார் வந்தார்.
“மன்றாடியாரே! நீர் கொடையாளி என்பதை அறிந்தேன்.
நீர் செலுத்த வேண்டிய இறைவரியைக் காலம் வரும்போது செலுத்திவிடுங்கள்.
இப்போது செல்லலாம்”
என்று சொல்லி விடுதலை செய்தார்.

“இன்னும் ஏதாவது வேண்டுமா” எனத் தளவாய் வினவினார்.
“சிறையிலிருக்கும் மற்ற பட்டையக்காரரையும் விடுதலை செய்யவேண்டும்” என்று மன்றாடியார் வேண்டினார்.
ராமப்பையர் அவ்வாறே விடுதலை செய்தார்.

வாணன் அரைந்திட மால் ராமப்பையன் மனம் மகிழ்ந்து
வேணது கேள் எனச் சம்பந்த சர்க்கரை வேளினும் இவ்
வீணரைக் காவல் விடீர் என்று கூறிட விட்டிடலும்
தாணு என்று இம் முடிக் காணிக்கைச் சாசனம் தந்தனரே. (மேற்கோள் பாடல்)

ராமப்பையர் என்பவர் கி.பி. 1623-1699 மதுரையில் ஆண்ட திருமலை அய்ய நாயிடு காரு அவர்களது சமஸ்தானத்தில் தளவாயாக இருந்தவர். திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை என்னும் நூல் இவரைப் பராக்கிரமசாலி என்று புகழ்கிறது.  

சங்ககிரி துருக்கத்தில் சிறையினில் சார்ந்திடுநாள்
சங்கை இலாதொரு பாவாணன் சென்று தமிழுரைக்க
அங்கண் இருந்துதன் இல்லாள் கழுத்தில் அணிந்திருக்கும்
மங்கலியந்தனைப் பெற்றளித்தான் கொங்கு மண்டலமே. 66

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.