Sunday, 26 February 2017

திணைமாலை நூற்றைம்பது 3 TinaiMalai 3

சாந்தம் எறிந்துழுத சாரல் சிறுதினை
சாந்தம் எறிந்த இதண்மிசைச் -  சாந்தம்
கமழக் கிளிகடியும் கார்மயில் அன்னாள்
இமிழக் கிளியெழா ஆர்த்து.         3
பகற்குறிக்கண் வந்த தலைமகனைக் கண்டு, தோழி செறிப்பு அறிவுறீஇயது

சந்தன மரத்தை வெட்டிச் சாய்த்து எரித்து உழுத மலைச்சாரல் புனத்தில் தினை விளைந்திருந்தது.
அதனைக் காவல் காக்கச் சந்தன மரத்தை வெட்டிக் கால் நட்டு இதணம் என்னும் பரண்-பந்தல் அமைத்திருந்தனர்.
அங்கே சந்தன மணம் கமழ்ந்தது.
அந்த மணத்தை நுகர்ந்துகொண்டே இவள் இதணத்தின் மேல் இருந்துகொண்டு கிளி ஓட்டினாள்.
இவள் கார் காலத்தில் ஆடும் மயில் போன்றவள்.
இவள் பாடிக்கொண்டே கிளியை ஓட்டினாள்.
இவள் குரலைக் கேட்டுக் கிளிகளும் பாடின; ஓடவில்லை.
அதனால் இவள் தாய் இவளைக் கிளி ஓட்டச் செல்லவேண்டாம் என்று வீட்டிலேயே இனிமேல் நிறுத்திவிடுவாள்.
தோழி தலைவனிடம் சொல்கிறாள்.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி