Monday, 29 August 2016

அகநானூறு Agananuru 215

“போய்வருகிறேன்” என்று சொல்ல விரும்பினால், நீ திரும்பும்வரையில் உயிருடன் இருப்பவர்களுக்குச் சொல், என்று தலைவி தலைவனிடம் தெரிவிக்கிறாள்.
1
வளைந்த பெரிய மலைமுகடுகளை உடைய குன்றம். (வேங்கடமலை) அதனைத் தாண்டிச் சென்றால் தமிழ் அல்லாத வேறு பல மொழிகள் பேசும் தேயம். அங்குத் தொழில் புரிந்து பொருளீட்டும் வலிமை மிக்க நெஞ்சுரத்தோடு, கையில் வேலை வலப்புறம் உயர்த்திக்கொண்டு செல்லும் மாட்சிமை உடையவர் தாங்கள். உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும் என்று வாழ்த்துவது நன்றுதான்.
2
நீங்கள் கருதிய நெஞ்சுரம் பிழைக்குமாயின், வழிப்பறி செய்பவர் அம்பு பட்டு, பருந்துக்கு இரையாக நேரும்.
கைவிரலில் கல்மனத்துடன் கூர்மையான அம்புகளைப் பிடித்து, வில்லால் (கொடுமரம்) எய்யும் ஆண்கள் பதுங்கியிருக்கும், பாதுகாப்புக்கு ஆள் இல்லாத வழியில் செல்லவேண்டி வரும்.  
3
கூரிய நகங்களும், சிவந்த வாயையும் உடைய பிணம் தின்னும் கழுகுகள் கூட்டமாகச் சேர்ந்து இறந்த உடம்பைத் தொட்டு, பெண் கழுகுக்கு ஊட்டும் வழியையும் கடக்க வேண்டி வரும்.
4
ஏதோ போய்விட்டார் என்று எண்ணி வருந்திக்கொண்டு தனியே வாழ்பவர்களுக்கு, “நான் போய்வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் செல். (என்னிடம் சொன்னால், நீ வரும் வரையில் நான் உயிருடன் இருக்கமாட்டேன்).
கழுகு பிணம் தின்னும் வழியில் செல்லவேண்டி வரும்
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
''விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
வேறு பல் மொழிய தேஎம் முன்னி,
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி,
செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே,   5
வலன் ஆக!'' என்றலும் நன்றுமன் தில்ல
2
கடுத்தது பிழைக்குவது ஆயின், தொடுத்த
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி,
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்,
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்,                       10
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை,
3
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல்
படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ,
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு,
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண்,              15
4
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே.

செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது.
இறங்கு குடிக் குன்ற நாடன் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.