Tuesday, 16 August 2016

அகநானூறு Agananuru 176

பரத்தையிடமிருந்து மனைவியிடம் வந்தவனைத் தோழி விலக்கி வைத்துப் பேசுகிறாள்.
1
ஊர! உன் ஊர் கடலைப் பார்ப்பது போல நீர்நிலைகளைக் கொண்டிருக்கும். நீர்நிலையில் தாமரைக்கிழங்கு நிலம் பிளக்கும்படி வேர் விட்டு இறங்கியிருக்கும். தாமரையின் துளை உள்ள காலாகிய கொடி மூங்கில் போல் இருக்கும். தாமரை இலை யானைக் காது போல் இருக்கும். தாமரை மொட்டு கழுமரம் போல இருக்கும். தாமரைப் பூ புன்னகை பூக்கும் முகம் போல் மலர்ந்திருக்கும். அதில் தேன் உண்ண வரும் வண்டுகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அங்கே நண்டு வேப்பம்பூ மொட்டுப் போல் கண்ணை நீட்டிக்கொண்டிருக்கும். நண்டைப் பிடிக்கக் குருகுப் பறவை திரியும். குகுகுக்குப் பயந்த நண்டு பகன்றைப் பூக்கொடி படந்திருக்கும் சேற்றில் தான் தோண்டி வரிக்கோடுகள் போட்டுள்ள வளையில் விரைந்து ஓடி அடைந்துகொள்ளும். இப்படிப்பட்ட ஊரை உடையவன் நீ.
2
தோழி சொல்கிறாள். உன் புதுக் காதலி உன் மேல் சினம் கொண்டாள் போலும். அதனால் உன் மனைவியை நாடி வந்துள்ளாய் போலும். உன் காதலி வீட்டில் வயலைக் கொடி மரத்தில் ஏறிப் படர்ந்திருக்கும். ஆம்பல் மலர் பூத்திருக்கும். வயலை ஆம்பல் கொடிகளைப் பூவுடன் அறுத்துத் தழையாடை புனைந்து அணிந்துகொண்டு அவள் விளையாடுவாள். அப்படி விளையாடும் மகளிரின் தழூஉ விளையாட்டு விழாவில் அவர்களைத் தழுவிக்கொண்டு நீ ஆடுகையில் மலர் போன்ற கண் கொண்ட உன் மாணிழை (நகைச்சிங்காரி) நீ தழுவியிருந்த கையை விலக்கிவிட்டு, உன்மேல் சினம் கொண்டாள் போலும். அதனால் இங்கு வந்திருக்கிறாய் போலும்.
3
அவள் இவளைப் போல வாழ எந்த வகையில் கடமைப்பட்டுள்ளாள்? மயிர் முளைத்துக்கொண்டிருக்கும் மகனைப் பெற்றுக்கொண்டு, நெல் சேமித்து வைத்திருக்கும் மனையில் வாழ எந்த வகையில் கடமைப்பட்டுள்ளாள்?
4
அங்கே உன் காதலி தன் முகத்தில் எழுதிய ஒப்பனை சிதையும்படி அழுது ஏங்கிக்கொண்டு இருப்பாள். அடித்தது போன்ற தித்தி அவள் உடம்பில் இருக்கும். உன் மனைவியைத் திட்டுவாள் போலத் தன் கைவிரல்களை நொடித்துக்கொண்டிருப்பாள். அதனால் அவள் விரல்கள் சிவந்திருக்கும். கூர் மழுங்கிய பற்களோடு ஊரெல்லாம் அறியும்படி உன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பாள். அவளைக் காண நீ செல்க. இவ்வாறு சொல்லி, பரத்தையிடமிருந்து மனைவியிடம் வந்த கணவனைத் தோழி விலக்குகிறாள்,
 
இது கழு மரம் | தாமரை மொட்டு கழுமரம் போல இருக்குமாம்
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்
1
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால்,
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்,
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை  5
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க,
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல்,    10
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர!
2
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,  15
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல்
3
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய,   20
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
4
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி,
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,
கூர்நுனை மழுகிய எயிற்றள் 25
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.

தோழி தலைமகனை வாயில் மறுத்தது.
மருதம் பாடிய இளங்கடுங்கோ பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி