Wednesday, 22 June 2016

விள்ள | காளமேகப்புலவர் KalamekapPulavar 141

சிவன்
சொல்லத்தக்க புதுமை ஒன்று உண்டு. என் வாயில் வந்து நிற்கும் சிவனுக்கு (தென்னம்பிள்ளைக்கு – தென்னாடுடைய சிவனுக்கு – தட்சிணாமூர்த்திக்கு) ஒரு சடைமுடி (ஒரு குலை). மூன்று தலை (அம்மையின் தலை, அப்பனின் தலை, கங்கையாள் தலை – மூன்றறு குரும்பை) அதில் இருக்கும் கொள்ளிக்கண் (நெற்றிகண்) நன்று. கையிலே ஈட்டி (சூலம்). கச்சு அணிந்த அம்மை முலைகளில் (இரண்டு இளநீர்) ஒன்று குறைந்து (ஓர் குரும்பை குறைந்து) மிஞ்சியிருக்கும் ஒரு முலையிலும் அமிழ்த ஊற்று உள்ளே இல்லாமல் இருக்கிறது.

பாடல்

விள்ளப் புதுமையொன் றுண்டால் வாயினின் மேவுதென்னம்
பிள்ளைக் கொருகுலை மூன்றே குரும்பை பிடித்ததிலே
கொள்ளிக் கணன்றீட்டி யாலோர் குரும்பை குறைந்தமிர்தம்
உள்ளிற் பொதிந்த விரண்டிள நீர்கச் சறைந்ததுவே .(141)

விள்ளப் புதுமை ஒன்று உண்டால் வாயினின் மேவு தென்னம்பிள்ளைக்கு ஒருகுலை மூன்றே குரும்பை பிடித்து அதிலே கொள்ளிக்கண் நன்று ஈட்டியால் ஓர் குரும்பை குறைந்து அமிர்தம் உள்ளில் பொதிந்த இரண்டு இளநீர் கச்சு அறைந்ததுவே



இது கட்டளைக் கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில் தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும் குற்றியலுகரமும் நீங்கலாக
16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில் தொடங்கும் பாடல்
அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர் கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள் ‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி