Monday, 30 November 2015

சனிநீர் ஆடு / ஆத்திசூடி AttiSudi

னிநீர் ஆடு 16
ஔவையார்
சனி = போகூழ் = சனீசுவரன்
சனிநீர் = போகூழின் நீர்மை
நீர்மை = ஒழுங்குமுறை
போகூழால் தோன்றும் மடி– என்பது வள்ளுவர் வாக்கு

ஊழ் என்பது செடியில் தோன்றும் மலர்
ஊழ்த்தல் இதன் வினைச்சொல்
தோன்றுதல் என்பது இதன் பொருள்
இணர் ஊழ்த்தும் நாறா மலர் – திருக்குறள்

ஒருவருக்கு நன்மை உண்டாவதும், (ஆகூழ் அமைவதும்), தீமை உண்டாவதும் (போகூழ் அமைவதும்) அவரது பிறவிக்குள்ளேயே ஊழ்த்துக் கிடக்கிறது. உடலுக்குள் உயிர் இருப்பது கண்ணுக்குத் தெரிவதில்லை. அறிவுக்குத் தெரிகிறது. உயிருடலுக்குள் ஊழ் இருப்பது அறிவுக்கும் புலப்படுவதில்லை. உய்த்துணரினும் அது ஆக்கம் தரும் ஆகூழாக இருக்குமா, இழப்பைத் தரும் போகூழாக இருக்குமா என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. இதுவே சனிநீர்.
சனி என்னும் ஊழ்
ஒளி-இருள், வெயில்-மழை போன்று நம் கட்டிக்குள் நில்லாமல் இயங்கிக்கொண்டிருப்பது 
 இந்தச் சனிநீரில் நாம் குளிக்கத்தான் வேண்டும்.
பயன் சனியின் கையில். ஊழின் கையில்.

சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளி
சனி = ஜன்னி = குளிர்
குளிர்ந்த நீரில் குளி
தை நீர் ஆடு
மார்கழி நீர் ஆடு
என்றெல்லாம் மேம்போக்காக இதற்குப் பொருள் கூறுவர்.

நீராடல் என்பதற்குத் தலைமுழுகு = விட்டுவிடு என்றும் பொருள் காண்பதுண்டு.ஙப்போல் வளை / ஆத்திசூடி AttiSudi

ப்போல் வளை 15
ஔவையார்
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
இந்த எழுத்துக்களில் ங் மெய்யெழுத்து
ங மெய்யில் அகரம் ஏறிய எழுத்து
இந்த இரண்டு எழுத்துக்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன.
பிற பயன்பாட்டில் இல்லை.
பயன்பாட்டில் உள்ள இரண்டும் பயன்பாட்டில் இல்லாத 11 எழுத்துக்களை வளைத்து வைத்துக்கொண்டு தமிழ் நெடுங்கணக்கில் நிலைபெறுமாறு செய்கின்றன.
அதுபோல் முடியாத மக்களுக்கு உதவியாக நாம் வாழவேண்டும்.
முடியாதவர்களை வளைத்துக்கொண்டு முன்னேறு கண்டொன்று சொல்லேல் / ஆத்திசூடி AttiSudi

ண்டொன்று சொல்லேல் 14
ஔவையார்
ஒன்றைக் கண்டுவிட்டு வேறொன்றைச் சொல்லாதே.
பொய்க்கரி போகன்மின்
பொய்சாட்சி சொல்லாதே
கண்டதைக் கண்டபடியே சொல்.
கண்ணாடி உள்ளதை உள்ளபடியே எதிரில் காட்டும்
இங்குக் கண்ணாடி கண்டது ஒன்று, காட்டுவது மற்றொன்று
இப்படிச் செய்யக்கூடாது, சொல்லக்கூடாது   ஐங்குறுநூறு AinguruNuru 101-110

தாய்க்குரைத்த பத்து

நெய்தல்

அன்னை என்பவள் இங்குச் செவிலித்தாய். 
செவிலித் தாயிடம் தோழி கூறும் செய்திகள் 
இந்தப் பத்துப் பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன. 
காதலன் காதலி உறவு திருமணமாக மாறுகிறது. 
தலைவனின் தேர் கடலோரக் கானல் மணலில் வருகிறது. 
திருமணச் செய்தியுடன் வருகிறது. 
தோழிக்கும் தலைவிக்கும் மகிழ்ச்சி. 
தாயும் மகிழவேண்டும் என்பது அவர்களின் ஆவல்.

101

அன்னை! பூ பிறரைக் கவர்வது போலப் பிறரை உண்ணும் கண்ணை உடையவள் உன் மகள். அவளை நினைவு நோயால் வருத்திக்கொண்டிருக்கும் அவளது கொண்கன் தேர், அதோ பார், வந்துகொண்டிருக்கிறது. நிலத்தில் ஏறிப் படரும் அடும்புக் கொடி அறுபடவும், நீரில் பூக்கும் நெய்தல் அலைமோதவும் வந்துகொண்டிருக்கிறது. திருமணத்துக்காக வந்துகொண்டிருக்கிறது.

102

அவர் தேரில் ஒலிக்கும் மணியோசை நம் ஊர்க் கடலில் பறவைக் கூட்டம் குரல் எழுப்புவது போல் கேட்கிறது.

103

அவன் ஊரிலுள்ள துறை புன்னை, ஞாழல் ஆகிய பூக்கள் உதிராவா என ஏங்கிக்கொண்டிருக்கும். அப்படியே அவனுக்காக இவள் அழகு ஏங்கிக்கொண்டிருக்கும்.  

104

நம் ஊரில், பலரும் உறங்கும் நேரத்தில், மெல்ல மெல்ல (நள்ளென) வருகிறதே தேர், அதில் வரும் மகன், உன் மகளின் பெருமகன் ஊரும் அவனைப் போலவே செல்வ-வளம் மிக்கது.  

105

முத்து மணலில் ஏறி மின்னும் துறையை உடையது அவன் கடல். அவன் வருவது அறிந்து உன் மகளின் நெற்றி பொன்னைக் காட்டிலும் சிவந்து பொலிவு பெற்றுள்ளது.


அன்னம் சங்கில் ஏறி
விளையாடல்
106
அவர் நாட்டில் ஆண்-அன்னம் தன் பெண்-அன்னத்தை மிதிப்பதாக எண்ணிக்கொண்டு சங்கின் மேல் ஏறி அமர்ந்திருக்கும். இவள் மார்பகம் அந்தச் சங்கு போல் உருண்டுகொண்டிருப்பதைப் பார்.  

107

இவள் அவனை நினைத்து மெலிந்துகொண்டிருக்கிறாள். (படர் நினைந்து) கடல்-அலை ஓசை கேட்கும்போதெல்லாம் அவன் தேரோசையோ என்று தூங்காமல் கிடக்கிறாள்.

108

அவன் முண்டகப் பூ மலரும் கடல் சேர்ந்த நிலத்தின் தலைவன். அவன் இவள் தோளை விட்டு விலகியிருக்கிறான். அவள் தோள் என்ன ஆகுமோ?

109

அவன் ஊர் நெய்தல் மலர் தன் துளை கொண்ட காம்பை உயர்த்திப் பூத்திருக்கிறது. அவன் இவளுக்குத் தலையளி (முதல் உடலுறவு) செய்தான். அவன் இவளை விட்டுவிட்டு இருக்கும்போதும் அந்தத் தலையளி-நேரம் பலநாளாக ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கிறதே!

110

இவள் மேனியில் பொன்-நிறம் பூத்திருப்பதைப் பார்த்து “ஏன்” என்று வினவுகின்றனர். புன்னைப் பூக்கள் கொட்டி அவன் துறை பொன்னிறம் பெற்றிருக்கிறது. அங்கேயும் இந்த வினா எழும்புமோ? இதுதான் விதியோ (பால்)

ஐங்குறுநூறு 11 ஆம் பத்து
திணை – நெய்தல்
1 ஆம் பத்து
பாடல் – 101-110
தாய்க்குரைத்த பத்து
புலவர் – அம்மூவனார்

பாடல் சொல் பிரிப்புப்பதிவு

101        

அன்னை, வாழி! வேண்டு, அன்னை! உதுக் காண்
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள்
பூப் போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே. 5

அறத்தோடு நின்ற பின்னர் வரைதற் பொருட்டுப் பிரிந்த தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச் சொல்லியது. 1

102        

அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்
நீல் நிறப் பெருங் கடல் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே.

இதுவும் அது. 2

103       

அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கு அமைந்தனனால் தானே;
தனக்கு அமைந்தன்று, இவள் மாமைக் கவினே.

அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3

104       

அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப்
பலர் மடி பொழுதின், நலம் மிகச் சாஅய்
நள்ளென வந்த இயல் தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃது ஊரே.

புதல்வற் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் ஊர் நன்மை காட்டிச் சொல்லியது. 4

105       

அன்னை, வாழி! வேண்டு, அன்னை! முழங்குகடல்
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தென,
பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே.

அறத்தொடு நின்ற பின் வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன் வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது. 5

106       

அன்னை, வாழி!வேண்டு, அன்னை! அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும்
தண் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.

அறத்தொடு நின்ற தோழி அது வற்புறுப்பான் வேண்டிச் செவிலிக்குச் சொல்லியது. 6

107       

அன்னை, வாழி! வேண்டு, அன்னை! என் தோழி
சுடர் நுதல் பசப்பச் சாஅய், படர் மெலிந்து,
தண் கடல் படு திரை கேட்டொறும்,
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.

தோழி செவிலிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது. 7

108       

அன்னை, வாழி! வேண்டு, அன்னை! கழிய
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன்
எம் தோள் துறந்தனன்ஆயின்,
எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே?

அறத்தொடுநிலை பிறந்த பின்னும் வரைவு நீடிற்றாக, 'மற்றொரு குலமகளை வரையும் கொல்?' என்று ஐயுற்ற செவிலி, குறிப்பு அறிந்த தோழி அவட்குச் சொல்லியது. 8

109       

அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நெய்தல்
நீர்ப் படர் தூம்பின் பூக் கெழு துறைவன்
எம் தோள் துறந்த காலை, எவன்கொல்
பல் நாள் வரும், அவன் அளித்த பொழுதே?

அறத்தொடு நின்ற பின்பு வரைவான் பிரிந்த தலைமகன் கடிதின் வாராதவழி, ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான்போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்குத் தோழி சொல்லியது. 9

110       

அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னை
பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை
'என்னை' என்றும், யாமே; இவ் ஊர்
பிறிது ஒன்றாகக் கூறும்;
ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே?  5


நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10

Sunday, 29 November 2015

வேதன், அரன், மால் | காளமேகப்புலவர் KalamekapPulavar

வேதன், அரன், மால் ஆகிய மூவரும் உண்ணுவது, பூண்பது, ஏறுவது - மூவருக்கும் மூன்றும் ஒரே வெண்பாவில் வரும்படி அமைத்துக் காளமேகப் புலவர் பாடிய வெண்பா.

பாடல்

சிறுவ னளைபயறு செந்நெற் கடுகு
மறிதிகிரி தண்டுமணி நூற்பொறியரவம்
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கரி .(38)
 
பிரமனும் பெருமாளும் சிவனது முடியையும் அடியையும் காண முயன்ற கதை
சிறுவன் | அளைபயறு | செந்நெல் |  கடுகு | - உணவு
சிவன் சிறுத்தொண்டர் சமைத்துத் தந்த சிறுவனின் கறியை உண்டார். | சிவராத்திரி அன்று வேகவைத்த பயறு உண்டார்.
திருமாலுக்கு நெல்லஞ்சோறு படையல்.
பிரமனுக்குக் கடுகு படையல்
மறி | திகிரி | தண்டு | - கையில் வைத்திருப்பது
சிவன் கையில் வைத்திருப்பது மான்.
திருமால் கையில் வைத்திருப்பது சக்கரம்
பிரமன் கையில் வைத்திருப்பது தண்டாயுதம்
வெற்றேறு | புள் | அன்னம் |
சிவன் ஏறிச்செல்வது வெண்ணிறக் காளைமாடு
திருமால் ஏறிச்செல்வது கருடப் புள்
பிரமன் ஏறிச்செல்வது அன்னப் பறவை
வேதன் | அரன் |மால் |
வேதம் ஓதும் பிரமன்
அரகர சிவன்
திருமால்
மணிநூல் பொறியரவம் - ஆகியவற்றையெல்லாம் நான் பார்த்தேன். இதற்குக் கல்மலையில் பூத்திருக்கும் தாழம்பூவே சான்று. (கற்றாழம் பூவே கரி)
மற்றும் மூவரும்
பூணூல் அணிந்திருப்பதையும்
புள்ளித் தோல் கொண்ட பாம்பை அணிந்திருப்பதையும்
நான் பார்த்தேன்.
சான்று வேண்டுமா?
அன்னப் பறவை உருவம் கொண்டு சிவனது முடியைக் காணச் சென்ற பிரமன் காணமுடியால் சிவன் தலையிலிருந்து நழுவிக் கீழே இறங்கிய தாழம்பூவைச் சாட்சியாக வைத்து, பன்றி உருவில் சிவனது அடியைக் காணச் சென்று முடியாமல் திரும்பிய திருமாலுக்குக் காட்டி நம்ப வைத்தானே, அந்தத் தாழம்பூ-தான் எனக்கும் சாட்சி (கரி)   


சிவன், கணபதி, செவ்வேள் | காளமேகப்புலவர் KalamekapPulavar

சிவன், கணபதி, செவ்வேள் - மூவருக்கும் சிலேடை அமைத்துக் காளமேகப் புலவர் பாடிய வெண்பா.

பாடல்

சென்னிமுக மாறுளதாற் சேர்கரமுன் னாலுமையால்
இன்னிலத்திற் கோடென் றிருக்கையால்மன்னுகுளக்
கண்ணுறுத லானுங் கணபதியுஞ் செவ்வேளும்
எண்ணரனு நேரா வரே. (37)

கண்ணுதல் சிவன்
சென்னிமுகம் ஆறு உளதால் | சேர்கரம் முன்னால் உமையால் | இன்னிலத்தில் கோடென்று இருக்கையால்
சிவனின் தலைமுகத்தில் கங்கை ஆறு உள்ளது | சேரும் கை முன்னால் உமை இருக்கிறாள் | இனிய நிலத்தில் திருவண்ணாமலை என்னும் கோடாக (மலையாக) இருக்கிறான்.
கணபதி
சென்னிமுக மாறு உளதால் | சேர்கரமுன் னால் | உமையால் | இன்னிலத்தில் கோடு என்று இருக்கையால்
கணபதியின் தலையில் மாறுபட்ட முகம் உள்ளது | அது முன்னே சேர்ந்திருக்கும் கை (கரம்) | உமை அரவணைக்கும் கை உள்ளது | இனிய நெஞ்ச நிலத்தில் இருக்கும் கணபதிக்குக் கொம்பு என்று ஒன்று உள்ளது.
செவ்வேள் முருகன்
சென்னிமுகம் ஆறு உளதால் | சேர்கரமெ முன் னால் (முந்நால்) | உமையால் | இன்னிலத்தில் கோடு என்று  இருக்கையால்
முருகனுக்கு ஆறு தலை கொண்ட முகம். | கை முந்நான்கு பன்னிரண்டு | கரம் தழுவுவது உமை | இனிய நிலவுலகில் மலைத்தெய்வமாக விளங்குகிறான். (சேயோன் மேய மைவரை உலகம் – தொல்காப்பியம்)
சிவன், உமை, கணபதி, செவ்வேள்


கடுங்காற்று கடுநட்பு | காளமேகப்புலவர் KalamekapPulavar

கடுங்காற்று மழைகாட்டும் கடுநட்புப் பகைகாட்டும் – என்று காளமேகப் புலவர் பாடிய வெண்பா.

பாடல்

நீரே பிறவா நெறிகாட்டி யாரெமக்கு
நீரே சமுசைநிலை யிட்டீர்நீரேயிவ்
விங்களமேன் செய்தீர் விடுங்கடுங்காற் றும்மழைகாட்
டுங்கடுநட் புப்பகைகாட் டும். (36)

நீரே, பிறவா நெறி காட்டியார் | எமக்கு நீரே சமுசைநிலை இட்டீர் | நீரே இவ் விங்களம் ஏன் செய்தீர்  | விடும் கடும் காற்று உம் மழைகாட்டும் | கடு நட்புப் பகை காட்டும்.

இறைவா! எமக்குப் பிறவா-நெறி காட்டியவரும் நீரே. சொல்வன்மையை எனக்குத் தந்தவரும் நீரே. பலரும் பலவாறெல்லாம் பாடும்படி என்னைக் கேட்டுத் தொந்தரவு (விகளங்கள்) செய்பவரும் நீரே. கடுமையான புயல்காற்று மழையைத் தரும் என்பதையும், நெருங்கிய நட்பானது பகைமையைத் தரும் என்பதையும் உன் உறவிலிருந்து தெரிந்துகொண்டேன்.
கடுமையான காற்று மழையைக் கொட்டுகிறது
அதுபோல,
இறைவனிடமுள்ள கடுமையான நெருங்கிய நட்பு சோதனைக்கு உள்ளாக்கும்


அகநானூறு Agananuru 43

பொருள் தேடச் செல்ல எண்ணியவன் மேலும் எண்ணிப் பார்க்கிறான்.

கடல்நீரை மொண்டு கருவுற்ற நிலையில் செல்லும் மழைமேகம் மின்னலுடன் சுழன்று, இடியுடன் முழங்குகிறது. வெயிலால் துன்பப்பட்ட பெண்யானை தன் ஆண்யானையுடன் கையும் மூழ்கும்படிப் பாயும் வெள்ளத்தில் குளிக்கிறது. மண்ணிலிருந்து வானம் வரை நீரே தெரிந்தது. மழை அளக்கும் கிண்ணத்தில் (குறுநீர்க் கன்னல்) மழையை அளந்து பார்த்தார்களே தவிர, வெயிலே பாயவில்லை. இப்படி எல்லாரும் அஞ்சும்படி வானம் பேய்மழை பொழிந்தது.   

இந்த நேரத்தில் நான் எப்படி இருக்கவேண்டும்? அவள் முல்லைப் பூவைக் காம்போடு கொய்து நெற்றிக்கு மேலே இருண்டு கிடக்கும் கூந்தலில் சூடிக்கொண்டிருக்கிறாள். அது காடெல்லாம் மணக்கிறது. அவள் மென்மையானவள். அவளது நல்லழகு கொண்ட மார்போடு மார்பாகச் சேர்ந்து கிடக்க வேண்டும். அப்படி இல்லாமல் பொருள் தேடுவதற்காகத் துணையைப் பிரிந்து, அவள் தரும் இன்பக் கொடை இல்லாமல், தனிப் படுக்கையில் இரக்கப்பட வேண்டிய நிலையில் கிடக்க எந்த மடையன் விரும்புவான்?
மழையை அளக்கும் கருவிகளில் ஒன்று
இது போன்ற ஒரு மழைமானி (குறுநீர்க் கன்னல்) சங்ககாலத்திலேயே பயன்படுத்தப்பட்டது 

திணை - பாலை
சொல் பிரிப்புப் பதிவு

கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,          5
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
மை இருங் கானம் நாறும் நறு நுதல்,  10
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
அளியரோ அளியர் தாமே அளி இன்று
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
இன் துணைப் பிரியும் மடமையோரே!              15
தலைமகன்பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
மதுரையாசிரியர்நல்லந்துவனார் பாடியது
The hero redeems his decision of going away for earning. It is rainy season. The rain is pouring with lightning and thunder. Flood is heavy. Male and female elephants are swimming hand in hand. There is no bright sun light in the sky. Water is pouring from heaven to floor with straight drops. There is rain-gauge to measure rain-fall. Without this gauge, nothing can measure the season. In such a season we might have enjoying, clubbing her breast like tender mattress. She is wearing mullai-flower on her hair that spreads fragrant all over the area. Leaving this opportunity, who will be the idiot, be away in a distant place to be mended? You, my mind! Redeem.         

A poem by: Nallanduvanar, a teacher in Madurai
The text is belongs to second century B.C. or earlier.  Agananuru 43

The hero redeems his decision of going away for earning. It is rainy season. The rain is pouring with lightning and thunder. Flood is heavy. Male and female elephants are swimming hand in hand. There is no bright sun light in the sky. Water is pouring from heaven to floor with straight drops. There is rain-gauge to measure rain-fall. Without this gauge, nothing can measure the season. In such a season we might have enjoying, clubbing her breast like tender mattress. She is wearing mullai-flower on her hair that spreads fragrant all over the area. Leaving this opportunity, who will be the idiot, be away in a distant place to be mended? You, my mind! Redeem.
A kind of rain-gauge 
 A poem by: Nallanduvanar, a teacher in Madurai
The text is belongs to second century B.C. or earlier.  


அகநானூறு 43

பொருள் தேடச் செல்ல எண்ணியவன் மேலும் எண்ணிப் பார்க்கிறான்.

கடல்நீரை மொண்டு கருவுற்ற நிலையில் செல்லும் மழைமேகம் மின்னலுடன் சுழன்று, இடியுடன் முழங்குகிறது. வெயிலால் துன்பப்பட்ட பெண்யானை தன் ஆண்யானையுடன் கையும் மூழ்கும்படிப் பாயும் வெள்ளத்தில் குளிக்கிறது. மண்ணிலிருந்து வானம் வரை நீரே தெரிந்தது. மழை அளக்கும் கிண்ணத்தில் (குறுநீர்க் கன்னல்) மழையை அளந்து பார்த்தார்களே தவிர, வெயிலே பாயவில்லை. இப்படி எல்லாரும் அஞ்சும்படி வானம் பேய்மழை பொழிந்தது.   
மழை மானி | மழை அளக்கும் கருவி
இது போன்ற கருவி அக்காலத்தில் இருந்தது
குறுநீர்க் கன்னல் என்று அதற்குப் பெயர்
இந்த நேரத்தில் நான் எப்படி இருக்கவேண்டும்? அவள் முல்லைப் பூவைக் காம்போடு கொய்து நெற்றிக்கு மேலே இருண்டு கிடக்கும் கூந்தலில் சூடிக்கொண்டிருக்கிறாள். அது காடெல்லாம் மணக்கிறது. அவள் மென்மையானவள். அவளது நல்லழகு கொண்ட மார்போடு மார்பாகச் சேர்ந்து கிடக்க வேண்டும். அப்படி இல்லாமல் பொருள் தேடுவதற்காகத் துணையைப் பிரிந்து, அவள் தரும் இன்பக் கொடை இல்லாமல், தனிப் படுக்கையில் இரக்கப்பட வேண்டிய நிலையில் கிடக்க எந்த மடையன் விரும்புவான்?

திணை - பாலை
சொல் பிரிப்புப் பதிவு

கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,          5
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
மை இருங் கானம் நாறும் நறு நுதல்,  10
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
அளியரோ அளியர் தாமே அளி இன்று
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
இன் துணைப் பிரியும் மடமையோரே!              15
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
மதுரையாசிரியர் நல்லந்துவனார் பாடியது


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி