Sunday, 30 August 2015

பட்டினப்பாலை Pattinappalai செய்தி-நிரல்

புகார்
காவிரிப்பூம்பட்டினம்
கடலுக்குள்

 • பாலைத்திணை பொருளமைந்த பாட்டு பட்டினப்பாலை என்னும் நூல்.
 • பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம்.
பட்டினமே பெறுவதாயினும் என் காதலியை விட்டுவிட்டுக் காட்டு-வழியில் வரமாட்டேன் – என்று பொருள்தேடச் செல்ல விரும்பிய தலைவன் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

 • பட்டினத்து அரசன் திருமாவளவன்.
 • அவன் பகைவரை அழித்த வேல் போலக் காடு கொடியது.
 • அவன் தன் மக்ககளைக் காத்த கோல் போல இவள் தோள் இனியது.
 • எனவே, இவளை விட்டுவிட்டு வரமாட்டேன் – என்கிறான் தலைவன்.
இதுதான் பாட்டு.

இந்தப் பாடல் விளக்கத்துக்காக 45 பகுதிகளாப் பிரித்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாடல் முழுவதிலும் உள்ள செய்திகள் நிரலாகத் தொகுக்கப்பட்டு இங்குத் தரப்படுகின்றன.


செய்தி-நிரல்

 1. மழை இல்லாவிட்டாலும் காவிரியில் நீர் வந்து வயலில் பொன்போல் விளைச்சல் பெருகும் 1
 2. கழனியில் கரும்பும் வயலில் ஆம்பலும் பூக்கும் 2
 3. செந்நெல், தென்னை, வாழை, பாக்கு, மஞ்சள், சேம்பு, இஞ்சி – விளையும் 3
 4. காயும் உணவுப்பொருள்களைக் கவர்ந்து உண்ணும் கோழிகளை, காதில் அணிந்திருக்கும் பொன்னணிகளைக் கழற்றி எறிந்து மகளிர் ஓட்டுவர். அவை குழந்தைகள் உருட்டும் நடைவண்டிகளைத் தடுக்கும் 4
 5. விலங்கு-பகை அல்லது மக்கள் தாக்கும் பகை அங்கு இல்லை 5
 6. மக்கள் பஃறியில் கொண்டுசென்ற உப்பை விற்ற பண்டமாற்று நெல்லுடன் திரும்புவர் 6
 7. சிவன் கோயிலுக்கு ஆணும் பெண்ணும் தம் காமம் நிறைவேற மூழ்கி எழும் இரட்டை ஏறி இருக்கும் 7
 8. அரசனின் வெள்ளை-மாளிகையின் கதவில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். அங்கே மொழி வளரப் பாடுபடுவோருக்கு உணவு வழங்கப்படும் 8
 9. கேணி-முற்றத்தில் முனிவர் தீ வளர்த்து வேள்வி செய்வர் 9
 10. கையாலும், கருவிகளாலும் மோதி, கவண் எறிந்து போர்ப்பயிற்சி பெறும் முரண்-களரி இருக்கும் 10
 11. நிறை-நிலா வெளிச்சத்தில் ஆணும் பெண்ணுமாகப் பரதவர் உண்டும் ஆடியும் மகிழ்வர் 11
 12. கடலில் விளையாடல், பின்பு அதன் உப்புப் படிவு நீங்க ஆற்றில் குளித்தல், பின்னர் நண்டு விளையாட்டு, பாவை விளையாட்டு – என்றெல்லாம் பகலில் விளையாடுவர் 12
 13. மகளிரும், மைந்தரும் மகிழ்ந்து திளைப்பர் 13
 14. மாடத்து மகளிர் இரவில் கடலில் திமிலில் எரியும் பந்தங்களை எண்ணுவர். மணல்-பரப்பில் பாட்டும் நாடகமும் நடைபெறும். 14
 15. தெருவில் அரனின் காவலர் உல்கு-வரி வாங்கிய பொருள்களில் முத்திரை பதிப்பர் 15
 16. நீரிலிருந்து நிலத்துக்கு ஏற்றும் பண்டங்களும், நிலத்திலிருந்து நீர்க்கப்பல்களுக்கு இறக்கும் பண்டங்களும் அளந்தறிய முடியாதபடி மண்டிக் கிடக்கும் 16
 17. அவற்றில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டு மூட்டை மூட்டைகளாக அடுக்கப்பட்டிருக்கும் 17
 18. அந்த மூட்டைகளில் ஏறி நாயும், ஆடும் விளை4யாடும் 18
 19. மாடங்களில் முருகன் வழிபாட்டு வெறியாட்டம் நடைபெறும் 19
 20. அப்போது இசைக்கருவிகள் முழங்கும் 20
 21. அங்கு முருகன் தெய்வத்தின் கொடி பறக்கும் 21
 22. படைக்கருவிகளின் இருப்பிடம் எனக் காட்டும் கொடிகள் பறக்கும் 22
 23. புலவர்களின் சொற்போர் நிகழுமிடம் என்பதைக் காட்டும் கொடி பறக்கும் 23
 24. கடலில் கப்பலின் கொடி பறக்கும் 24
 25. மீன் விற்குமிடம், நறவுக்கள் விற்குமிடம் – எனக் காட்டும் கொடிகள் பறக்கும் 25
 26. இந்தப் பதாகை நிழலில்தான் தேவர் உலகம் போன்ற ஊர் 26
 27. கடல்-வழி வந்த குதிரை, வண்டியில் வந்த மிளகு-மூட்டை, வடமலையில் பிறந்த மணி, குடமலையில் பிறந்த சந்தனம், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை-காவிரிப் படுகை விளைச்சல்கள், ஈழத்து உணவு, காழகத்து (கடாரம்-பர்மா)ச் செல்வம் – இப்படிப் பல சிறியனவும், பெரியனவுமாக மண்டிக்கிடக்கும் 27
 28. வலைஞர் முற்றத்தில் மீன், விலைஞர் பட்டிகளில் குதிரை- விற்கப்படும் 28
 29. கொலை-களவு இல்லை – அந்தணர் வேள்வி நடைபெறும் – பசுவும் காளையும் வளர்ப்பர் – பண்ணியம் சுட்டு வழங்குவர் – புண்ணிய வாழ்க்கை நடைபெறும் 29
 30. வணிகர் நடுவுநிலையில் வாணிகம் செய்வர் 30
 31. வேறு வேறு மொழி பேசும் மக்கள் கலந்து உறவாடி வாழ்ந்தனர் 31
 32. நெஞ்சே! இப்படிப்பட்ட காவிரிப்பூம்பட்டினமே எனக்குக் கிடைப்பதாயினும் என் காதலியை விட்டுவிட்டு வரமாட்டேன் 32
 33. திருமாவளவன் வரிப்புலி கூட்டில் வளர்ந்தது போல வளர்ந்தான். குழியில் விழுந்த ஆண்யானை தன் கொம்புகளால் குழிக்கரையைக் குத்திக் குழியைத் தூர்த்துக்கொண்டு மேலேறித் தன் பெண்யானையை அடைந்தது போல வாளுடன் வெளிப்பட்டுப் போந்து தன் ஆட்சித் தாயத்தைப் பெற்றான். 33
 34. பெற்றதோடு மகிழ்வுறாமல், பகைவரின் யானை, குதிரை, வயவர் படைகளை வீழ்த்தினான். 34
 35. உழிஞைப் பூச்சூடி நாடு விரிவாக்கப் போரில் ஈடுபட்டான். 35
 36. போர்-முரசு முழங்கிற்று 36
 37. கரும்பும், நெல்லும் விளைந்த பகைவர் நிலங்களைப் பாழாக்கி, மான்கள் விளையாடும் நிலம் ஆகும்படிச் செய்தான். 37
 38. கொண்டி-மகளிரும், யானையும் தங்கும் இடங்களாகச் செய்தான். 38
 39. பாணர் ஆடிப் பாடி மகிழ்வித்த பகைவர் மன்றங்களில் நரியும் கூகையும் குரல் எழுப்புமாறு செய்தான். 39
 40. விருந்து உண்டும், கிளி-மொழி கேட்டும் மகிழ்ந்திருந்த மாடங்களில் கொள்ளையடிக்கும் எயினர் வாழும் இடங்களாக மாறுமாறு செய்தான். 40
 41. அப்படியும் சினம் தணியாமல், மலையைப் பிளப்பேன், கடலைத் தூர்ப்பேன், வானத்தை வீழ்த்துவேன், காற்றின் திசையை மாற்றுவேன் – என்றல்லாம் முழங்ககினான். 41
 42. ஒளியர், அருவாளர், வடவர், குடவர், பொதுவர் ஆகிய குடிமக்களின் அரசர்களும், தென்னவன், இருங்கோவேள் ஆகிய மன்னர்களும் அடங்குமாறு செய்தான். 42
 43. தன் நாட்டில் காடுகளை அழித்து நாடாக்கினான். குளங்கள் தோண்டி நீர்வளம் பெருக்கினான். ஆட்சியாளர்களை உறையூரில் குடிபுகச் செய்து அங்கும் கோட்டை அமைத்துக்கொண்டு அங்கும் இங்குமாக இருந்து ஆட்சி புரிந்துவந்தான். 43
 44. வென்ற பகைவரின் முடிப் பொன்னால் கழல் செய்து தன் பிள்ளைகளுக்கு அணிவித்து, அவர்கள் ஓடியாடுவதைக் கண்டுகளித்தான். 44
 45. இப்படி வாழ்ந்த திருமாவளவனின் வேல் போல் கொடியது பொருள்தேடச் செல்லும் காடு. அவன் செங்கோல் போல் குளுமையானது என் காதலியின் தோள். எனவே, நெஞ்சே, இவளை விட்டுவிட்டு வரமாட்டேன் – என்கிறான் தலைவன். 45
சோழன் கரிகாற்பெருவளத்தானைக்
கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி