Monday, 24 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 44

பாறையின் மேலேயிருந்து
மால்பு கட்டித் தொங்கவிட்டு
இறங்கித் தேன் எடுப்பர்
கடாம் என்னும் ஒலி
(9)
தேன் எடுக்கும் கொள்ளை ஒலி - ஆண்குரங்கு கூடச் செல்ல முடியாத மலைப்பாறை இடுக்கில் தேனீக்கள் கூடு கட்டி வைத்திருக்கும். கயிற்றின் வழியாக இறங்கி அந்தத் தேனைக் கொள்ளையிடும் கொள்ளையொலி (மால்பு = கயிறு)
(10)
கானவர் உவகை ஒலி - அரசன் ஆணைப்படி சிற்றூர்களை வென்று அதனைச் சூறையாடும் கானவர்களின் மகிழ்ச்சி ஆரவார ஒலி.
(11)
குரவரின் குரவை ஒலி - சூரையாடிக் கொண்டுவந்த பொருள்-விருந்து அரசனுக்குப் போதும் என்று கருதி, போருக்கு எழுந்த நாளில் காலையில் நறவுக்கள்ளை ஊற்றித் தந்த குறப்பெண்களுக்கும் அதனை ஊற்றித் தந்து அவர்களோடு சேர்ந்து மான்தோல் பறையை முழக்கிக் கொண்டு கானவர் குரவை ஆடும் ஒலி.
(12)
கல்லிலே மோதி ஓடும் ஆற்றின் இரங்கல் ஒலி - சிறு பருக்கைக்கல் பாதையில் தேர் செல்லும்போது கேட்கும் ஓசைபோல் ஆற்று வெள்ளம் பிளவுப் பாதைகளில் மோதிக்கொண்டு இறங்கும்போது கேட்கும் இரங்கல் ஒலி.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

கலை கையற்ற காண்பு இன் நெடு வரை,        315
நிலைபெய்து இட்ட மால்பு நெறி ஆக,               
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை;     
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை,         
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என;    
நறவு நாள் செய்த குறவர் தம் பெண்டிரொடு 320
மான் தோல் சிறு பறை கறங்கக் கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை;             
நல் எழில் நெடுந் தேர் இயவு வந்தன்ன,          
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை;              

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்
  

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி