Monday, 24 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 43

மலைபடு கடாம்
(6)
பூச்சூடும் பாட்டொலி - மலைநில மக்கள் வேங்கைப் பூவை மாலையாகத் தொடுத்து அணிந்து கொள்ளும்போது பாடும் பாட்டொலி.
(7)
யானையின் தழங்கு குரல் - பெண்யானை தன் கன்றைத் தன் உடல் நிழலில் மறைத்து அழைத்துச் சென்றது. அக் கன்றின் தந்தை தன் வலிமையை யெல்லாம் காட்டி யானைக் குட்டியைத் தாக்க வரும் புலியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. ஆனாலும் புலி யானைக் கன்றைப் பிடித்துவிட்டது. கண்ட யானையின் சுற்றம் முழுமையுமாக ஒன்று சேர்ந்து முழங்கி எழுப்பிய தழங்குகின்ற குரல்.

தாய்தந்தையருடன் குட்டிக் குரங்கு
(8)
மந்தி பூசல் - தாய்க்குரங்கு தன் குட்டியைப் பிடிக்க மறந்து தாவியபோது குட்டி பெரிய பள்ளத்தில் விழுந்து துன்புற்றுக் கத்தியது. மரத்திலிருந்த தளிர்களைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்த குரங்குகள் அதன் துன்பத்தைப் போக்க முடியாமல் பூசலிடும் ஒலி. கட்டிப்போட்டிருக்கும் ஒன்று எழுப்பும் ஒலி

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை        305
மலைமார், இடூஉம் ஏமப் பூசல்:              
கன்று அரைப்பட்ட கயந் தலை மடப் பிடி       
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்,
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, கிளையொடு,     
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்;         310
கைக் கோள் மறந்த கரு விரல் மந்தி   
அரு விடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு,
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றி,            
சிறுமை உற்ற களையாப் பூசல்;             

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்
  

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி