Wednesday, 19 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 3


உங்களோடு பேரியாழ்ப் பாணரும் வருகின்றார்

பேரியாழ் (பேர்+யாழ்)
பேரியாறு (பேர்+யாறு)
இவற்றில் வரும் ரி குற்றியலிகரமாகும்
இவற்றில் குற்றியலுகரம் குற்றியலிகரமாக மாறவில்லை
இது தமிழியலில் காணப்படும் ஒரு விந்தை

  • அருப்பம் என்பது மக்கள் செல்லாத அருகிய இடங்கள். பாண! அருப்பத்தில் நீங்கள் செல்லக் கூடாது.
  • மக்களின் கால்தடம் பதிந்த இயவு வழிகளிலேயே செல்ல வேண்டும்.
பேரியாழின் உறுப்புக்கள்

  • திவவு - முறுக்கிய வளையல்போல் இருக்கும்.
  • கேள்வியாழ் - கடியப்படும் பகை நரம்புகளில் விரல் போகாமல் இசைத்துப் பழக்கப்பட்டது.
  • நரம்பு - செம்மையாக முறுக்கப்பட்டுள்ளதால் குரலின் ஒலிபோல் இனிமையாக ஒலிக்கும்.
  • அரலை - அரற்றும் ஒலி தராதது.
  • துளை - நரம்பு கோத்திருக்கும் துளை. இது வரகு அரிசி போல் இருக்கும்.
  • பத்தல் - இங்கிருந்துதான் மலையின் எதிரொலி போல் யாழின் மிழலை எதிரொலிக்கும்.
  • ஆணி - புதிய வெண்ணரம்புகள் ஆணியில் கட்டித் துளையில் முடுக்கப்பட்டிருக்கும்.
  • பச்சை - பத்தலுக்குத் தீட்டப்பட்ட இலை வண்ணம்.
  • உந்தி - மணம் கமழும் கூந்தல் இரு பிளவாய் மார்பில் விழும். மடந்தையின் கொப்புளில் அழகுடன் மயிர் ஒழுகியிருப்பது போன்ற வரைவுகளுடன் இரு பிளவாய்க் கிடக்கும் யாழின் வயிறு.
  • மாமை - காதல் பருவத்தில் பெண்கள் மேனியில் தோன்றும் பொன் நிறம். இது பொன்னை அரத்தால் அராவும்போது உதிர்ந்த துகள்போல் அழகு தரும் நீர்மை பட்டுக் கிடக்கும். யாழிலும் இப்படிப்பட்ட அழகமைப்பு தீட்டப்பட்டிருந்தது.
  • உரு - களாப்பழம் போன்ற கருமையால் பளபளக்கும் பாங்கினைக் கொண்டிருந்தது. பெண்ணின் இந்தப் பளபளப்புப் பொலிவை யாழும் கொண்டிருந்தது.
அது பேரியாழ்.
பேரியாழ் வளைந்து நிமிர்ந்த கொம்பு போன்றது.

யாழிசை
சீறியாழின் இசை - இன்பத்தில் தோய்த்துக் கேட்போரை மயக்கும்.
பேரியாழின் உயிர்ப்பிசை எழுச்சியூட்டும்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

அடுக்கல் மீமிசை, அருப்பம் பேணாது,             
இடிச் சுர நிவப்பின் இயவுக் கொண்டு ஒழுகி-               20
தொடித் திரிவு அன்ன தொண்டு படு திவவின்;          
கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா,         
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்,
அரலை தீர உரீஇ, வரகின்            
குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ, 25
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி,            
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து,         
புதுவது போர்த்த பொன் போல் பச்சை;             
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்             30
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து       
அடங்கு மயிர் ஒழுகிய அவ் வாய் கடுப்ப,      
அகடு சேர்பு பொருந்தி, அளவினில் திரியாது,            
கவடு படக் கவைஇய சென்று வாங்கு உந்தி;              
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை,         35
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்,   
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ்    

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்




No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.