Friday, 21 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 24

வீடுதோறும் பெறும் உணவு வகைகள்
  • தேன் – மரத்திலும் பாறையிலும் ஏறிப் பெறப்படும் மலைத் தாரம். (தரும் பொருளைத் தாரம் என்பது பழந்தமிழ் வழக்கு)
  • தேறல் – தேனை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்துக் கள்ளாக்கிப் பருகத் தருவது தேறல்.
  • நறவு – (உண்டார்கண் அல்லது அடுநறா …குறள்) காய்ச்சி வடித்த மணநீர். இது மகிழ்ச்சி தரும் குடிவகை.
  • தேங்காய் – அருவி அடித்துக்கொண்டு வந்த பழம். இதைச் சிதைத்தால் உள்ளே இருப்பது வெள்ளை வித்துப் பொருள்.
  • கடம்புமான் கறி – வருவிசை அம்பால் பெற்றது
முளவு மா
முள்ளம்பன்றி
  • முள்ளம் பன்றிக் கறி – கொழுப்பை அரிந்து எறிந்துவிட்டுப் பங்கிட்டு வைத்த முளவுக் கறி - பெண்நாய் முடுக்கிப் பிடித்துக் கொண்டுவந்த விலங்குக்கறி
  • பழன் – இது நெருப்புக் கட்டி வெண்மையாகும் வரையில் புடையடுப்பின் மேல் புலாலை வைத்து வாட்டிப் பழுப்பாக்கிய பழன்.
  • மாங்காய் போட்ட மோர்க்குழம்பு – (இனிப்பும் புளிப்பும் கலந்த மாங்காய்)
  • நெல்லரிசிச் சோறு – (மூங்கில் போல் வளர்ந்த நெல்)
  • இதனைச் சமைத்த குறமகள் தன் கூந்தலை உச்சிக் கொண்டையாகப் போட்டு முடிந்திருந்தாள்.
  • இந்த முச்சியில் மணம் கமழும் பூவைச் சூடியிருந்தாள்.
  • அவள் சமையலின் மணம் வழைமரம் மிக்க மலைச்சாரல் எல்லாம் கமழ்ந்தது.
  • சோறு வெள்ளை வெளேரென்று மலர்ந்திருந்தது.
  • தன் மக்களுக்கு இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று தடுத்து வட்டியில் போடுவது போல் படைத்தாள்.
  • இவ்வாறு படைப்பதை ஒவ்வொரு மனையிலும் பெறுவீர்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

ஏறித் தரூஉம் இலங்கு மலைத் தாரமொடு, 170
வேய்ப் பெயல் விளையுள் தேக் கள் தேறல்
குறைவு இன்று பருகி, நறவு மகிழ்ந்து, வைகறை
பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர,          
அருவி தந்த பழம் சிதை வெண் காழ்
வரு விசை தவிர்த்த கட மான் கொழுங் குறை,        175
முளவுமாத் தொலைச்சிய பைந் நிணப் பிளவை,   
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண் புடைக் கொண்ட துய்த் தலைப் பழனின்       
இன் புளிக் கலந்து மா மோர் ஆக,           
கழை வளர் நெல்லின் அரி, உலை ஊழ்த்து,  180
வழை அமை சாரல் கமழத் துழைஇ,  
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சிக் 
குறமகள், ஆக்கிய வால் அவிழ் வல்சி,            
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ,   
மக முறை தடுப்ப, மனைதொறும் பெறுகுவிர்          185

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி